சென்னை : ஆசிய சாம்பியன் கோப்பை ஹாக்கி தொடரில் பங்கேற்பதற்காக சென்னை வந்துள்ள பாகிஸ்தான் அணியினர் தங்களுக்கு செய்யப்பட்டுள்ள வசதிகள் குறித்து பாராட்டி பேசி இருக்கிறார்.
ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை தொடர் 16 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னையில் நடைபெறுகிறது. இந்த தொடரின் பங்கேற்பதற்காக இந்தியா வந்துள்ள பாகிஸ்தான் அணியினருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இருநாட்டுக்கும் இடையே அரசியல் ரீதியான பிரச்சினை இருப்பதால் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியாவுக்கும் இந்தியா கிரிக்கெட் அணி பாகிஸ்தானுக்கு செல்வது கிடையாது. ஆனால் ஹாக்கி அணியினர் தமிழ்நாட்டில் நடைபெறும் தொடருக்கு வந்து இருக்கிறார்கள். அப்போது செய்தியாளரிடம் பேசிய பாகிஸ்தான் ஹாக்கி அணியின் தலைமை பயிற்சியாளர் ஷக்லின் இந்தியாவுக்கு எதிரான போட்டியை தாம் மிகுந்த எதிர்பார்ப்புடன் நோக்கி காத்துக் கொண்டிருப்பதாக கூறியுள்ளார்.
தங்களுடைய அணி இந்த தொடருக்காக நல்ல பயிற்சி செய்திருப்பதாகவும் மற்ற அணியினருக்கு தாங்கள் அதிர்ச்சி வைத்தியம் கொடுப்போம் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் தமிழ்நாட்டு மக்கள் குறித்து பேச தொடங்கிய பயிற்சியாளர் ஷக்லின் இதுபோன்ற வசதிகளை தாம் எதிர்பார்க்கவே இல்லை என்று கூறினார்.
தமிழக மக்கள் தங்களுக்கு உற்சாக வரவேற்பு கொடுத்ததாகவும், தமிழக ரசிகர்கள் சிறப்பானவர்கள் என்றும் தங்களை மரியாதையுடன் நடத்தியதாகவும் கூறினார்.மேலும் தங்கள் அணி வீரர்களுக்கு வழங்கப்பட்ட உணவு நாங்கள் ஏதோ பாகிஸ்தானில் இருப்பது போல் தோன்றுகிறது என்றும் அவர் பாராட்டியுள்ளார்.
குறிப்பாக அணிவீரர்களுக்காக ஸ்பெஷல் மட்டன் பிரியாணி வழங்கப்படுவதாகவும் அதன் சுவை அவ்வளவு சிறப்பாக இருப்பதாகவும் சக்லின் பாராட்டினார்.தாம் ஏற்கனவே 2006 ஆண்டு சென்னையில் வந்து பாகிஸ்தான் ஹாக்கி அணிக்கு கேப்டனாக செயல்பட்டு இருப்பதை சுட்டிக்காட்டிய ஷக்லின் தமிழகத்தில் கிடைக்கும் அன்பு பெரிய அளவில் இருப்பதாகவும் நெகிழ்ச்சியுடன் கூறினார்.