மும்பை: இந்தியா, பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையிலான போர் பதற்றம் காரணமாக ஏற்கனவே இருந்த உறவில் தற்போது மிகப்பெரிய விரிசல் ஏற்பட்டிருக்கிறது. இது ஏற்கனவே கிரிக்கெட் உலகில் பிரதிபலித்த நிலையில், தற்போது ஹாக்கி போட்டியிலும் பாதிக்கப்பட்டிருக்கிறது.
இந்தியாவில் நடைபெற இருந்த ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு பாகிஸ்தான் வரமாட்டேன் என்று கூறியதை அடுத்து போட்டிகள் துபாய்க்கு மாற்றப்பட்டது. இந்த நிலையில் ஆசிய கோப்பை ஹாக்கி தொடர் போட்டி வரும் ஆகஸ்ட் 29ஆம் தேதியிலிருந்து செப்டம்பர் 7ஆம் தேதி வரை பீகார் மாநிலத்தில் உள்ள ராஜ்கிரில் நடைபெற இருந்தது.

இந்த தொடரில் ஜப்பான், சீனா, இந்தியா, தென் கொரியா, மலேசியா பாகிஸ்தான் உள்ளிட்ட 8 அணிகள் பங்கு பெற இருந்தது. இந்த நிலையில் இந்த தொடரில் முதலில் விளையாட இருந்த ஓமன் திடீரென்று இந்த தொடரில் பங்கேற்க முடியாது எனக்கூறி விலகியது. இதனால் ஓமனுக்கு பதில் கஜகஸ்தான் அணி விளையாட தகுதி பெற்றது.
இந்த தருணத்தில் பாகிஸ்தான் அணியும் ஆசிய கோப்பை போட்டியில் விளையாட இந்தியாவுக்கு வரமாட்டோம் என்று போர் கொடி தூக்கியது. இதனால் பாகிஸ்தான் அணிக்கு பதிலாக வங்கதேசம் அணி ஆசிய கோப்பை ஹாக்கி தொடருக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இந்தத் தொடரில் வெற்றி பெறும் அணி நேரடியாக 2026 உலககோப்பை ஹாக்கி தொடருக்கு தகுதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த தொடர் நெதர்லாந்து மற்றும் பெல்ஜியம் இணைந்து நடைபெற இருக்கின்றது. குரூப் ஏ வில் இந்திய அணி ஜப்பான், சீனா மற்றும் கஜகஸ்தான் ஆகிய அணியுடன் மோத உள்ளது.
நடப்பு சாம்பியனான தென்கொரியா, மலேசியா, வங்கதேசம், சீன தைப்பே ஆகிய நாடுகள் பி பிரிவில் உள்ளன. குரூப் பிரிவில் முதல் இரண்டு இடங்கள் பிடிக்கும் அணி சூப்பர் ஃபோர் சுற்றுக்கு தகுதி பெறும். இதை அடுத்து இறுதிப் போட்டி செப்டம்பர் 7ஆம் தேதி நடைபெற உள்ளது. முதலில் பாகிஸ்தான் அணி வீரர்களுக்கு விசா தர மத்திய அரசு மறுத்த நிலையில், பின்னர் அனுமதிக்கப்படுவார்கள் என விளக்கம் அளித்து இருந்தது.
ஆனால் பாகிஸ்தான் ஹாக்கி சம்மேளனம் தங்கள் அணியை இந்தியாவுக்கு அனுப்புவது என்பது கடினமான காரியம் என்றும் பாதுகாப்பு பிரச்சனைகள் ஏற்படலாம் என்றும் கூறி தங்களது அணியை அனுப்ப மறுத்துவிட்டது. இது தொடர்பாக சர்வதேச ஹாக்கி சம்மேளனம் மற்றும் ஆசிய ஹாக்கி சம்மேளனத்திற்கு கடிதம் ஒன்றையும் பாகிஸ்தான் அனுப்பி இருக்கின்றது.
பாகிஸ்தான் தற்போது ஆசிய ஆக்கி கோப்பை தொடரிலிருந்து விலகிய நிலையில் வரும் நவம்பர் மாதம் 28ஆம் தேதி முதல் டிசம்பர் 10ஆம் தேதி வரை ஜூனியர் உலகக்கோப்பை தமிழ்நாட்டில் நடைபெற இருக்கிறது. அந்த தொடரும் பாகிஸ்தான் பங்கேற்குமா என்ற சந்தேகம் தற்போது ஏற்பட்டுள்ளது.