சென்னை : ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை தொடரின் இறுதிப்போட்டிக்கு இந்திய அணி தகுதி பெற்றுள்ளது. சென்னையில் கடந்த 2007 ஆம் ஆண்டு பிறகு ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி தொடர் நடைபெறுகிறது.
இதனால் இந்த போட்டியில் பல்வேறு ரசிகர்கள் எதிர்நோக்கி காத்திருந்தார்கள். அவர்களுக்கு விருந்தளிக்கும் வகையில் இந்திய அணி வீரர்கள் இந்த தொடரில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள்.

இந்த தொடரில் தோல்வியை தழுவாத அணி என்ற பெருமையை இந்தியா படைத்திருக்கிறது. லீக் சுற்றில் ஜப்பான் உடன் மட்டும்தான் இந்திய அணி டிரா செய்தது. இந்த நிலையில் இன்று அரை இறுதியில் ஜப்பானை எதிர்கொள்ளும் வாய்ப்பு இந்தியாவுக்கு கிடைத்தது. ஏற்கனவே கடந்த இரண்டு ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இந்திய அணி ஜப்பானிடம் அரை இறுதியில் தோல்வியை தழுவி தொடரில் இருந்து வெளியேறி இருக்கிறது.
இதனால் கடந்த இரண்டு முறை அடைந்த தோல்விகளுக்கு இன்று பதிலடி கொடுக்க வேண்டிய உத்வேகத்தில் இந்திய அணி வீரர்கள் களமிறங்கினர். மேலும் நட்சத்திர வீரர் ஸ்ரீஜேஸ்க்கு இது 300-வது சர்வதேச போட்டியாகும். இதனால் ஸ்ரீஜேஸ்க்கு வெற்றியை பரிசாக கொடுக்க வேண்டும் என்ற புத்தகத்தில் சக அணி வீரர்கள் களமிறங்கினர்.
ஆட்டத்தின் தொடக்கம் முதலே இந்திய அணி வீரர்கள் அதிரடி காட்ட ஜப்பான் தடுமாறியது. இந்திய அணிக்கு முதல் 15 நிமிடத்தில் இரு முறை கோல் அடிக்கும் வாய்ப்பு கிடைத்தாலும் அதனை ஜப்பான் வீரர்கள் தடுத்தனர். எனினும் நம்பிக்கையை விடாத இந்திய வீரர்கள் தங்களது அதிரடியை இரட்டிப்பாக மாற்றினார்கள்.இதற்கு 19-வது நிமிடத்தில் பலன் கிடைத்தது.
இந்திய வீரர் ஆகாஷ்தீப் முதல் கோலை அடித்தார். இதனை அடுத்து அடுத்த நான்கு நிமிடத்தில் ஹர்மன் பிரித் தமக்கு கிடைத்த வாய்ப்பை கோலாக மாற்றினார். அதன் பிறகு மன்பிரீத் ஆட்டத்தின் 30-வது நிமிடத்தில் மூன்றாவது கோலும் ஆட்டத்தின் 34 ஆவது நிமிடத்தில் சுமித் ஒரு கோலையும் அடித்தார்கள்.
இதனால் ஜப்பான் அணி செய்வது அறியாமல் திகைத்து நின்றார்கள். இதேபோன்று ஆட்டத்தின் 51வது நிமிடத்தில் தமிழக வீரர் கார்த்தி கோல் அடிக்க இந்திய அணி ஐந்துக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் வெற்றி பெற்றது.ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இறுதி ஆட்டத்தில் இந்திய அணி மலேசியாவில் எதிர்கொள்கிறது.