சென்னை : ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி தொடரில் பங்கேற்றுள்ள பாகிஸ்தான அணியில் தமிழர் ஒருவர் இடம் பெற்றிருப்பது ரசிகர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
சென்னையில் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை தொடர் ஆகஸ்ட் 3ஆம் தேதி முதல் தொடங்கி 12ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த தொடரில் பங்கேற்பதற்காக பாகிஸ்தான் ஹாக்கி அணி இந்தியா வந்திருக்கிறது.

இதில் சென்னை வந்தவுடன் பாகிஸ்தான் அணிக்கு மிகப்பெரிய பிரச்சனை ஒன்று ஏற்பட்டிருக்கிறது. அதற்கு கடைசி நேரத்தில் தமிழர் ஒருவர் உதவி செய்திருக்கிறார் விசா பிரச்சனை காரணமாக பாகிஸ்தான் அணியின் உடற்பயிற்சியாளர் சென்னை வந்து சேர முடியவில்லை. இதை போன்று அணியில் இருக்கும் துணை உடற்பயிற்சியாளரும் தனிப்பட்ட பிரச்சனையின் காரணமாக இந்தியா வர இயலவில்லை.
இதனால் வீரர்களை பராமரிக்க உடற்பயிற்சியாளர் இல்லாமல் பாகிஸ்தான் அணி தவித்து இருக்கிறது. இது குறித்து கேள்விப்பட்ட தமிழ்நாடு ஹாக்கி சம்மேளனம் ஒரு பேர் உதவியை செய்திருக்கிறது. தங்கள் அணியில் உடற்பயிற்சியாளராக இருக்கும் ராஜ்கமல் என்ற நிபுணரை பாகிஸ்தான் அணியின் உடற்பயிற்சி நிபுணராக பணிபுரிய அனுமதி அளித்திருக்கிறது.
இது குறித்து பேசிய ராஜ்கமல் முதல் போட்டி நடைபெறுவதற்கு முன்பு பாகிஸ்தான் அணியினர் எங்களை தொடர்பு கொண்டு தங்களுடைய அணிக்கு உடற்பயிற்சி பராமரிப்பாளராக வந்து உதவ முடியுமா என கேட்டார்கள். இடையில் ஒரு நாள்தான் இருந்தது. எனினும் நான் யோசிக்காமல் பாகிஸ்தான் அணிகளுடன் சேர்ந்தேன். முதல் போட்டி முடிந்தவுடன் வீரர்களுடன் எனது பணியை தொடங்கி நள்ளிரவு வரை செய்தேன் என்று ராஜ்கமல் கூறியுள்ளார்.
பாகிஸ்தான் வீரர்களுக்கு ஆங்கிலம் கொஞ்சம் தெரிந்ததால் தாம் அவர்களுடன் ஆங்கிலத்தில் தான் பேசி பழகினேன் என்று கூறிய ராஜ்கமல் நான் அங்கு சென்றவுடன் என்னை சிறப்பாக வரவேற்று மரியாதை செலுத்தி தம்மை பார்த்துக் கொண்டதாகவும் கூறியுள்ளார். தாம் ஒரு இந்தியனாக இருந்தாலும் போட்டியின் போது எந்த வீரரும் காயம் அடைய கூடாது என்பதிலே குறியாக தான் இருப்பேன் என்றும் ராஜ்கமல் கூறியுள்ளார்.
ராஜ்கமல் குறித்து பேசிய பாகிஸ்தான் பயிற்சியாளர் முகமது சாக்லின் ராஜ்கமல் தங்களுக்கு மிகப்பெரிய பணியை செய்வதாகவும், கடவுளால் அனுப்பப்பட்ட நபராக தான் நாங்கள் அவரை கருதுகிறோம் என்றும் கூறினார். நடந்து முடிந்த டிஎன்பிஎல் லீக் தொடரில் ராஜ்கமல் நெல்லை அணிக்காக உடற்பயிற்சி பராமரிப்பாளராக பணிபுரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது .