
மஸ்கட் : இந்தியா - பாகிஸ்தான் மோதல் என்றாலே எந்த விளையாட்டாக இருந்தாலும் ஒரு பரபரப்பு இருக்கும்.
அதுவும் இறுதிப் போட்டி என்றால் கேட்கவா வேண்டும்? ஆசிய ஹாக்கி சாம்பியன்ஸ் ட்ராபி இறுதிப் போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் ஹாக்கி அணிகள் மோதப் போகின்றன என்றவுடன் பெரும் பரபரப்பு எழுந்தது.
ஆனால், ரசிகர்களின் எதிர்பார்ப்பை ஏமாற்றும் வகையில், இந்திய நேரப்படி இரவு 10.40 மணிக்கு தொடங்க வேண்டிய போட்டி, பலத்த மழையால் தாமதமானது. ஆடுகளம் போட்டியை நடத்த முடியாத அளவு மோசமாக இருந்தது.
இதையடுத்து, போட்டியை மறுநாள் தள்ளி வைக்க முடியாத சூழ்நிலையில், இந்தியா - பாகிஸ்தான் இரு அணிகளும் வெற்றியை பகிர்ந்து கொள்வார்கள் என அறிவிக்கப்பட்டது. இதனால், விறுவிறுப்பான போட்டியை எதிர்பார்த்து இருந்த ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றம் ஏற்பட்டது.
ஆசிய ஹாக்கி சாம்பியன்ஸ் ட்ராபியில் இந்தியாவும், பாகிஸ்தானும் இதுவரை இருமுறை கோப்பை வென்றுள்ளன. 2011 மற்றும் 2016இல் இந்தியாவும், 2012 மற்றும் 2013இல் பாகிஸ்தானும் இந்த தொடரை வென்றுள்ளன.
இந்தியா அரையிறுதியில் ஜப்பானை 3-2 என்ற கணக்கில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது. இந்திய ஹாக்கி அணி மன்ப்ரீத் சிங் தலைமையில் கோப்பையை வென்று, அடுத்து புவனேஸ்வரில் நடக்க உள்ள ஹாக்கி உலகக்கோப்பை தொடருக்கு வெற்றியுடன் செல்லும் முனைப்பில் இருந்தது.
பாகிஸ்தான் அணி மலேசியாவை 3-1 என அரையிறுதியில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளது. ஆசிய அளவில் இந்தியா - பாகிஸ்தான் இரு அணிகளுமே ஹாக்கியில் முக்கிய அணிகள் என்பதாலும், இரு நாடுகளும் போட்டி மனப்பான்மை அதிகம் கொண்ட நாடுகள் என்பதாலும் இந்த போட்டி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ஆனால், இறுதியில் இரு அணிகளும் வெற்றியாளர்களாக அறிவிக்கப்பட்டதால், இரு நாட்டு ரசிகர்களுக்கும் ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது.
முன்னதாக, வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் ஜப்பான் அணியும், மலேசியா அணியும் மோதின. அந்த போட்டி 2-2 என சமநிலையில் முடிந்த நிலையில், வெற்றியாளரை தேர்வு செய்ய ஷூட்-அவுட் நடைபெற்றது. அதில் மலேசியா வெற்றி பெற்றது.