டெல்லி: காமன்வெல்த் போட்டியில், ஆடவர் ஹாக்கி இறுதிப் போட்டியில் இந்தியா பரிதாபகரமாக தோல்வியைத் தழுவியது. ஒரு கோல் கூட அடிக்க முடியாமல் தோற்ற இந்தியா வெள்ளிப் பதக்கத்தையே வென்றது. இப்போட்டியை பிரதமரும், அமைச்சர்களும் பார்த்து ரசித்தனர்.
இந்தியா, ஆஸ்திரேலியா இடையே இன்று ஆடவர் ஹாக்கி இறுதிப் போட்டி நடைபெற்றது. காமன்வெல்த் ஹாக்கி இறுதிப் போட்டியில் இந்தியா கலந்து கொள்வது இதுவே முதல் முறையாகும். இதனால் இந்தியா மீது எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் இந்தியாவின் ஆட்டம் பெரும் அதிர்ச்சியூட்டுவதாக இருந்தது.
மூன்று முறை காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற, உலக சாம்பியனான ஆஸ்திரேலியாவை நிச்சயம் வீழ்த்துவோம் என்று இந்திய வீரர்கள் நம்பிக்கையுடன் கூறியிருந்தனர். ஆனால் ஆஸ்திரேலியர்களின் ஆட்டத்திற்கு முன் இந்தியர்களால் கொசு போல தெரிந்தனர்.
அடுத்தடுத்து கோல்களைப் போட்டுக் குவித்த ஆஸ்திரேலியா கடைசி வரை இந்தியாவை ஒரு கோல் கூட போட விடவில்லை. இதனால் 8-0 என்ற கணக்கில்ஆஸ்திரேலியா வெற்றி பெற்று தங்கப் பதக்கத்தைத் தட்டிச் சென்றது. இந்தியாவுக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது.
இன்றைய போட்டியை பிரதமர் மன்மோகன் சிங் நேரில் வந்து பார்த்து ரசித்தார். மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில் சிபல், விளையாட்டு அமைச்சர் எம்.எஸ்.கில், டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித் ஆகியோரும் போட்டியை கண்டு களித்தனர்.
அரங்கம் முழுக்க ரசிகர்களால் நிரம்பியிருந்தது. பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் போட்டியைப் பார்த்து ரசித்தனர். ஆனால் கடைசியில் அனைவரும் பெரும் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
சாய்னா தங்கம் வெல்வாரா:
இதேபோல மகளிருக்கான பேட்மிண்டன் ஒற்றையர் இறுதிப் போட்டியில் இந்தியாவின் சாய்னா நெஹ்வால் மோதவுள்ளார். இப்போட்டியில் அவர் தங்கம் வெல்வார் என்ற எதிர்பார்ப்பு ஏகமாக உள்ளது.
இந்தப் போட்டியை பிரதமரின் மனைவி குர்சரன் கவுர் நேரில் பார்த்து இந்தியாவுக்கு உற்சாகமளிக்கவுள்ளார்.