சென்னை : ஆசிய சாம்பியன் கோப்பை ஹாக்கி தொடரில் இந்திய அணி தங்களது முதல் லீக் ஆட்டத்தில் சீனாவை எதிர்கொண்டது. ஹாக்கி என்றாலே ஒடிசாவுக்கு என தத்து கொடுத்தது போல் இந்தியாவில் அனைத்து முக்கிய தொடர்களும் அங்கு தான் நடைபெறுகிறது.
தொடர்ந்து இரண்டு உலக கோப்பை போட்டிகளும் ஒடிசாவில் நடந்தது. இந்த நிலையில் தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சீரிய முயற்சியால் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பைத் தொடர் சென்னையில் 14 ஆண்டுகளுக்குப் பிறகு நடத்தும் உரிமை வழங்கப்பட்டது.

இந்தியா விளையாடும் போட்டி என்பதால் இன்றைய ஆட்டம் ஹவுஸ்புல் ஆனது. இந்த நிலையில் இந்திய வீரர்கள் சுமித் நூறாவது போட்டியும் அமித் 150வது போட்டியிலும் களமிறங்கினர். இவர்களுக்கு பாராட்டு அளிக்கும் விதமாக தமிழக அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின் மற்றும் சேகர் பாபு ஆகியோர் நினைவு பரிசை வழங்கி கௌரவித்தனர். இந்த தொடருக்காக சுமார் மூன்றரை கோடி ரூபாய் அளவில் சென்னை ராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானம் புனரமைக்கப்பட்டது.


ஆட்டத்தின் முதல் 16 நிமிடத்தில் இந்திய அணி அடுத்தடுத்து நான்கு கோல்களை போட்டது. சீனாவில் 18 மற்றும் 25 வது நிமிடத்தில் இரண்டு கோல்களை போட மீண்டும் இந்திய அணி போட்டியை தங்களது கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு இறுதியில் 7-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தினர். இந்திய அணி வெள்ளிக்கிழமை ஜப்பான் உடன் மோதுகிறது.