டெல்லி: ஹாக்கி இந்தியா லீக் தொடர் சுமார் ஏழு ஆண்டுகளுக்கு பின்பு மீண்டும் நடைபெற உள்ளது. 2017 ஆம் ஆண்டு நஷ்டத்தால் அந்த தொடர் நிறுத்தப்பட்டது. அது மட்டும் இன்றி சர்வதேச போட்டிகளுக்கு இடையே, சுமார் ஒரு மாத காலத்திற்கு நடைபெறும் ஹாக்கி இந்தியா லீக் தொடரை நடத்த முடியாத சூழ்நிலை இருந்தது.
தற்போது சர்வதேச ஹாக்கி அமைப்பிடம் 35 நாள் சாளரம் கேட்கப்பட்டு, அனுமதியும் கிடைத்துள்ளது. அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு ஒவ்வொரு ஆண்டிலும் ஹாக்கி இந்தியா லீக் தொடர் நடத்தப்படும் 35 நாட்களும் வேறு எந்த சர்வதேச ஹாக்கி போட்டிகளும் நடைபெறாது. இந்த 35 நாள் இடைவெளியில் ஹாக்கி இந்தியா லீக் தொடரின் ஆடவர் மற்றும் மகளிர் பிரிவு தொடர்கள் நடத்தப்பட உள்ளது.

ஆடவர் பிரிவில் எட்டு அணிகளும், மகளிர் பிரிவில் ஆறு அணிகளும் பங்கேற்க உள்ளன. இதில் ஒவ்வொரு அணியிலும் 24 வீரர்கள் இடம் பெற வேண்டும். அதில் 16 வீரர்கள் இந்தியாவை சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். அதில் நால்வர் ஜூனியர் வீரர்களாகவும் இருக்க வேண்டும். ஒரு அணியில் எட்டு வெளிநாட்டு வீரர்களை சேர்த்துக் கொள்ளலாம்.
2025 ஹாக்கி இந்தியா லீக் தொடருக்கான மெகா ஏலம் வரும் அக்டோபர் 13 முதல் 15 தேதிகளில் நடைபெற உள்ளது. இந்த முறை இரண்டு மைதானங்களில் இந்தத் தொடர் நடக்க உள்ளது. ஆடவர் பிரிவு ஹாக்கி இந்தியா லீக் போட்டிகள் அனைத்தும் ஒடிசாவில் உள்ள பிர்சா முண்டா ஹாக்கி மைதானத்தில் நடைபெற உள்ளன. மகளிர் பிரிவு போட்டிகள் அனைத்தும் ஜார்கண்ட் தலைநகர் ராஞ்சியில் உள்ள மைதானத்தில் நடைபெற உள்ளன.
நீண்ட இடைவெளிக்குப் பின்பு இந்தத் தொடர் மீண்டும் துவங்குவதால் அணிகளுக்கு அதிக சுமையை அளிக்க வேண்டாம் என்ற முடிவின் காரணமாகவே இரண்டு மைதானங்களிலேயே அனைத்து போட்டிகளையும் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மகளிர் பிரிவு ஹாக்கி இந்தியா லீக் இறுதிப்போட்டி 2025 ஆம் ஆண்டு ஜனவரி 26 ஆம் தேதி அன்று நடைபெறும்.
ஆடவர் பிரிவு இறுதிப்போட்டி 2025 ஆம் ஆண்டு பிப்ரவரி 1 ஆம் தேதி நடைபெறும். இந்த முறை ஒரு போட்டி கூட டிராவில் முடிவடையாது எனவும் அறிவித்துள்ளது ஹாக்கி இந்தியா அமைப்பு. ஒரு போட்டி டிராவில் முடிந்தால், வெற்றியாளரை தீர்மானிக்கும் வகையில் ஷூட் அவுட் சுற்று நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதனால், இனி ஒவ்வொரு போட்டியும் சுவாரசியமாக இருக்கும். ஷூட் அவுட் சுற்று எப்போதுமே இதயத் துடிப்பை எகிறச் செய்யும் என்பதால் அதன் மூலம் ரசிகர்களை ஈர்க்கவே இந்த முடிவு எடுக்கப்பட்டு இருக்கிறது.