ஹேக்: உலக கோப்பை ஆண்கள் ஹாக்கி போட்டித் தொடரில் இந்திய அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் பெல்ஜியம் அணியிடம் தோல்வி அடைந்தது.
நெதர்லாந்தின் ஹேக் நகரில் உலக கோப்பை ஆண்கள் ஹாக்கி தொடர் நேற்று கோலாகலமாகத் தொடங்கியது. இந்த தொடரில், மொத்தம் 12 அணிகள் இரு பிரிவுகளாக லீக் ஆட்டங்களில் மோதுகின்றன.

ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி பெல்ஜியம், நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, மலேசியா, ஸ்பெயின் அணிகளின் சவாலை எதிர்கொள்கிறது.
பி பிரிவில் ஜெர்மனி, நெதர்லாந்து, நியூசிலாந்து, தென் கொரியா, அர்ஜென்டினா, தென் ஆப்ரிக்கா இடம் பெற்றுள்ளன. ஜூன் 10 தேதி வரை லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன.
லீக் சுற்றின் முடிவில் இரு பிரிவிலும் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு முன்னேறும். அரை இறுதி ஆட்டங்கள் 13ம் தேதியும், இறுதிப் போட்டி ஜூன் 15ம் தேதியும் நடைபெற உள்ளது.
இந்நிலையில், 'ஏ' பிரிவில் நடந்த லீக் போட்டியில் இந்தியா, பெல்ஜியம் அணிகள் மோதின.துவக்கத்தில் இருந்து பெல்ஜியம் வீரர்கள் ஆதிக்கம் செலுத்தினர். இந்திய கோல்கீப்பர் ஸ்ரீஜேஷ், பெல்ஜியத்தின் கோல் அடிக்கும் முயற்சியை தடுத்தார்.
ஆட்டத்தின் 18, 19, 27வது நிமிடத்தில் கிடைத்த மூன்று 'பெனால்டி கார்னர்' வாய்ப்புகளையும் பெல்ஜியம் வீரர்கள் வீணடித்த நிலையில் 34வது நிமிடத்தில் புளோரண்ட் வான் அயுபெல், ஒரு பீல்டு கோல் அடிக்க, முதல் பாதி முடிவில் பெல்ஜியம் 1-0 என்ற முன்னிலை தகுதிக்கு உயர்ந்தது.
இரண்டாவது பாதியில் எழுச்சி கண்ட இந்திய அணிக்கு, ஆட்டத்தின் 45வது நிமிடத்தில் தரம்விர் சிங் கொடுத்த 'பாஸை' மன்தீப் சிங் கோலாக மாற்ற, 1-1 என சமநிலை அடைந்தது.
ஆட்டத்தின் 47வது நிமிடத்தில் கிடைத்த 4வது 'பெனால்டி கார்னர்' வாய்ப்பையும் பெல்ஜியம் அணியினர் வீணடித்தனர். தொடர்ந்து அசத்திய இந்திய அணிக்கு 50வது நிமிடத்தில் ஆகாஷ்தீப் சிங், ஒரு கோல் அடித்து கைகொடுத்தார்.
இதற்கு, 56வது நிமிடத்தில் பெல்ஜியம் வீரர் சைமன் கவுக்னார்டு 'பெனால்டி கார்னர்' மூலம் கோல் அடித்து பதிலடி தந்தார். ஆட்டத்தின் 66வது நிமிடத்தில் இந்தியாவுக்கு கிடைத்த முதல் 'பெனால்டி கார்னர்' வாய்ப்பு வீணானது.
விறுவிறுப்பான கடைசி நிமிடத்தில் தனது அதிரடி ஆட்டத்தால் அசத்திய பெல்ஜியத்தின் ஜான்-ஜான் டோஹ்மன் ஒரு பீல்டு கோல் அடித்தார். இதற்கு இந்திய வீரர்களால் பதிலடி கொடுக்க முடியாததால், ஆட்டநேர இறுதியில் இந்திய அணி 2-3 என்ற கோல் கணக்கில் தோல்வியை தழுவியது.