ஹாக்கி உலகக் கோப்பை இன்று தொடக்கம்: இந்தியா-பாக். அணிகள் முதல் மோதல்

இன்று இரவு இந்தியா-பாகிஸ்தான் ஹாக்கி அணிகள் மோதும் பரபரப்பான ஆட்டம் நடக்கிறது.
டெல்லியில் உள்ள மேஜர் தியான்சந்த் மைதானத்தில் நடக்கும் இந்த உலக கோப்பை ஹாக்கி தொடரில் உலகின் டாப் 12 அணிகள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.
'ஏ' பிரிவில் நடப்பு சாம்பியன் ஜெர்மனி, ஆலந்து, கொரியா, நியூசிலாந்து, கனடா, அர்ஜென்டினா அணிகளும், ' பி' பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, ஸ்பெயின், இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா அணிகளும் இடம் பெற்றுள்ளன.
இரு பிரிவிலும் உள்ள அணிகள் லீக் ஆட்டங்களில் மோதும். லீக் போட்டிகளின் முடிவில், இரு பிரிவிலும் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு முன்னேறும்.
மார்ச் 11ம் தேதி அரை இறுதி ஆட்டங்களும், 13ம் தேதி 3வது இடத்துக்கான போட்டியும் மற்றும் இறுதிப் போட்டியும் நடைபெறவுள்ளது.
தொடக்க நாளான இன்று 3 ஆட்டங்கள் நடக்கின்றன. தென் ஆப்ரிக்கா - ஸ்பெயின் (மாலை 4.35 மணிக்கு), ஆஸ்திரேலியா - இங்கிலாந்து (6.35 மணிக்கு) அணிகளின் ஆட்டங்கள் நடக்கின்றன.
இதைத் தொடர்ந்து, ஹாக்கி ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் இந்தியா - பாகிஸ்தான் மோதல் இரவு 8.35 மணிக்கு நடக்கிறது.
பாகிஸ்தான் அணிதான் அதிக அளவிலான உலகக் கோப்பைகளை வென்றுள்ள ஒரே அணியாகும். இதுவரை பாகிஸ்தான் 4 முறை பட்டம் வென்றுள்ளது. நெதர்லாந்து 3 முறையும், ஜெர்மனி 2 முறையும், இந்தியா, ஆஸ்திரேலியா தலா ஒரு முறையும் பட்டம் வென்றுள்ளன.
கடந்த 1975ம் ஆண்டில் கோலாலம்பூரில் நடந்த போட்டியில் இந்தியா தங்கப் பதக்கம் வென்றது. அதன் பிறகு நடந்த போட்டிகளில் இந்திய அணி மிக மோசமாக விளையாடி பின்தங்கியுள்ளது.
இந்நிலையில், பி பிரிவில் இடம் பெற்றுள்ள இந்தியா, பாகிஸ்தான் அணிகள் முதல் லீக் ஆட்டத்திலேயே மோதுவதால், இந்த ஆட்டத்தை ரசிகர்கள் வெகுவாக எதிர்பார்த்துள்ளனர்.
இந்திய அணியின் கேப்டன் ராஜ்பால் சிங், ஆட்டத்தை வென்றே தீருவது என்ற முனைப்பில் இருப்பதாக கூறியுள்ளார். சந்தீப் சிங் இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்குகிறார்.
துஷார் காண்டேகர், ஷிவேந்திர சிங் ஆகியோரும் தாக்குதல் ஆட்டத்தில் அசத்துவார்கள் என எதிர்பார்க்கலாம். அஷ்ராப் ஜீஷன் தலைமையிலான பாகிஸ்தான் அணியும் மீண்டும் சாதிக்கும் துடிப்புடன் களமிறங்குகிறது.
பாதுகாப்பு:
உலகக்கோப்பை ஹாக்கி போட்டிகளுக்கு தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்திருந்ததால், பாதுகாப்பு ஏற்பாடுகளும் கடுமையாக்கப்பட்டுள்ளன.
மைதானத்தில் பார்வையாளர்களின் இருக்கையே சுமார் 16 ஆயிரம் தான் இருக்கும். ஆனால், 5 ஆயிரம் போலீசார், 100 கமாண்டோ படையினர், ஆயிரம் துணை ராணுவப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
ரூ.1 கோடி பரிசு:
உலகக் கோப்பை ஹாக்கிப் போட்டியை, செயில் எனப்படும் இந்திய உருக்கு ஆணையம் இணைந்து நடத்துகிறது.
இந்திய அணியை உற்சாகப்படுத்தும் வகையில், கோப்பையை வென்றால் ரூ.1 கோடி பரிசுத் தொகை வழங்கப்படும் என செயில் அறிவித்துள்ளது.
இந்திய அணி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தால், ரூ. 50 லட்சமும், மூன்றாம் இடம் பிடித்தால் ரூ.25 லட்சமும் வழங்கப்படும் என மத்திய உருக்குத் துறை அமைச்சர் வீரபத்திர சிங் அறிவித்துள்ளார்.
இந்திய அணி பங்கேற்கும் போட்டி அட்டவணை:
பிப்ரவரி 28 (இரவு 8.35) இந்தியா - பாகிஸ்தான்
மார்ச் 2 (இரவு 8.35) இந்தியா - ஆஸ்திரேலியா
மார்ச் 4 (இரவு 8.35) இந்தியா - ஸ்பெயின்
மார்ச் 6 (இரவு 8.35) இந்தியா - இங்கிலாந்து
மார்ச் 8 (இரவு 8.35) இந்தியா - தென்னாப்பிரிக்கா
அரையிறுதி ஆட்டம்
மார்ச் 11 (மாலை 6.05) பிரிவு ஏ முதல் இடம் Vs பிரிவு பி 2வது இடம்
மார்ச் 11 (இரவு 8.35) பிரிவு பி முதல் இடம் Vs பிரிவு ஏ 2வது இடம்
3வது இடத்துக்கான போட்டி
மார்ச் 13 (மாலை 6.05) முதல் அரையிறுதியில் தோல்வியுறும் நாடு - 2வது அரையிறுதியில் தோல்வியுறும் நாடு
இறுதிப் போட்டி
மார்ச் 13 (இரவு 8.35)
Story first published: Wednesday, December 7, 2011, 18:35 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications