சென்னை:
சென்னையில் நடந்த ஆசிய கோப்பை ஹாக்கிப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் கொரியாவை படு தோல்வி அடையச் செய்து இந்தியா சாம்பியன் பட்டத்தை தக்க வைத்துக் கொண்டது.
சென்னை மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியம். நேரம் மாலை 6.30 மணி. ஸ்டேடியமா அல்லது அலைகள் ஆர்ப்பரிக்கும் கடலா என்று சந்தேகிக்கும் அளவுக்கு ஆரவாரித்துக் கொண்டிருந்த மனிதக் கடல். நிரம்பி வழிந்த ரசிகர் கூட்டத்திற்கு மத்தியில் மோதலில் இறங்கிய இந்திய, கொரியா அணிகள்.
7வது ஆசியக் கோப்பை ஹாக்கிப் போட்டியின் இறுதி ஆட்டம்தான் இது. இதுவரை இல்லாத அளவுக்கு இந்தப் போட்டி இந்திய ரசிகர்களுக்கு மிகவும் விறுவிறுப்பான ஒன்றாக இருந்தது. காரணம் தொடக்கம் முதலே இந்தியா தொடர்ந்து வெற்றி பெற்று வருவதுதான். அதனால்தான் இறுதிப் போட்டியைக் காண இத்தனை கூட்டம்.
இப்படி ஒரு போட்டி இதுவரை நடந்ததில்லை என்று கூறும் அளவுக்கு இந்தியாவின் ஆட்டம் அபாரமாக இருந்தது. ஆட்டத்தின் தொடக்கம் முதல் இறுதி வரை இந்தியாவின் ஆதிக்கமே மேலோங்கி இருந்தது. உள்ளூர் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவுடன், இந்திய வீரர்கள், கொரியாவை பந்தாடினர்.
ஆட்டம் தொடங்கிய நான்காவது நிமிடத்திலேயே சிவேந்திர சிங் கோல் அடித்து ஆட்டத்திற்கு விறுவிறுப்பைக் கூட்டினார். ஆனால் 11வது நிமிடத்தில் கொரியா பதிலடி கொடுத்தது. ஆனால் அடுத்த இரண்டு நிமிடங்களில் சுனில் இன்னொரு கோல் போட்டு இந்தியாவுக்கு பலத்தைக் கொடுத்தார்.
முதல் பாதி ஆட்டம் முடிய ஐந்து நிமிடம் இருக்கையில், பிரபோத் சிங் ஒரு கோல் அடித்து இந்திய ரசிகர்களை உற்சாகத்தில் மிதக்க விட்டார். இரண்டாவது பாதி ஆட்டத்தின்போது கொரிய வீரர்கள் சற்றே ஆக்ரோஷமாகவும், உத்வேகத்துடனும் ஆடினர்.
இருப்பினும் அதையும் மீறி இந்தியா இன்னொரு கோல் அடித்தது. ராஜ்பால் சிங் அந்தக் கோலை அடித்தார். ஆனால் இதை முறையற்ற கோல் என்று கொரிய வீரர்கள் ஆட்சேபித்தனர். வெளிநடப்பும் செய்தனர். ஆனால் அவர்களை நடுவர்களும், அதிகாரிகளும் சமாதானப்படுத்தியதைத் தொடர்ந்து மீண்டும் ஆட வந்தனர்.
இந்த சமயத்தில் இந்திய வீரர்கள் படு வேகமாக ஆடத் தொடங்கினர். ராஜ்பால் சிங்கும், இக்னேஸும் அடுத்தடுத்து ஒரு கோல் அடித்து இந்தியாவிற்கு வெற்றியை உறுதிப்படுத்தினர். இறுதியில் 7க்கு 2 என்ற கோல் கணக்கில் இந்தியா அபார வெற்றி பெற்றது.
இதன் மூலம் தற்போதைய சாம்பியனான இந்தியா, சாம்பியன் பட்டத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது. இறுதிப் போட்டியின் ஆட்ட நாயகனாக கோல் கீப்பர் பல்ஜித் சிங் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இறுதிப் போட்டியில் வென்ற இந்திய அணிக்கு முதல்வர் கருணாநிதி வெற்றிக் கோப்பையை அளித்து வாழ்த்தினார். கோப்பையை சக வீரர்களுடன் சேர்ந்து கேப்டன் பிரபோத் திர்கே பெற்றுக் கொண்டார்.
இந்தியா சாம்பியன் பட்டத்தை வென்றதைத் தொடர்ந்து ஸ்டேடியம் முழுவதும் நிரம்பியிருந்த ரசிகர்கள் உற்சாகத்தில் துள்ளிக் குதித்தனர்.
கிரிக்கெட் போட்டியைக் காண வரும் ரசிகர்களைப் போல, நேற்றைய போட்டியை காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டு வந்திருந்தது சென்னை நகருக்கு புதிய அனுபவமாக அமைந்தது.
குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து:
7வது ஆசிய கோப்பை ஹாக்கி சாம்பியன் பட்டத்தை இந்தியா வென்றதற்கு குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல், பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
முன்னதாக 3வது இடத்திற்காக நடந்த போட்டியில், மலேசியா, ஜப்பானை 5-3 என்ற கோல் கணக்கில் தோற்கடித்து வெற்றி பெற்றது. 5வது இடத்திற்கான போட்டியில், சீனா, பாகிஸ்தானை 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி 5வது இடத்தைப் பெற்றது.
கோப்பைக் கனவுடன் வந்த பாகிஸ்தானுக்கு 6வது இடம் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.