பெண்கள் உலகக் கோப்பை ஹாக்கி.... காலிறுதியில் இந்தியா... 40 ஆண்டுகளுக்குப் பிறகு சாதனை!
Recommended Video

லண்டன்: பெண்கள் ஹாக்கி உலகக் கோப்பையில் பிளே ஆப் சுற்றில் இத்தாலியை 3-0 என இந்தியா வென்றது. இதன் மூலம், 40 ஆண்டுகளுக்குப் பிறகு காலிறுதிக்கு இந்தியா முன்னேறியுள்ளது.
16 நாடுகள் பங்கேற்கும் பெண்கள் ஹாக்கி உலகக் கோப்பை போட்டிகள் நடந்து வருகின்றன. இதில், இங்கிலாந்து, அமெரிக்கா, அயர்லாந்து ஆகிய அணிகளுடன் பி பிரிவில் இந்தியா இடம்பெற்றுள்ளது.

4 பிரிவுகளிலும் முதலிடத்தைப் பிடிக்கும் அணிகள் காலிறுதிக்கு நேரடியாக நுழையும். ஒவ்வொரு பிரிவிலும் 2 மற்றும் 3வது இடத்தைப் பிடிக்கும் அணிகள், பிரிவுகளுக்குள் நடக்கும் பிளே ஆப் சுற்று போட்டியில் விளையாடும். அதில் வெற்றி பெறும் அணிகள் கால் இறுதிக்கு முன்னேறும்.
இந்தியா தனது முதல் ஆட்டத்தில் ஒலிம்பிக் சாம்பியனான இங்கிலாந்துடன் 1-1 என டிரா செய்தது. அதற்கடுத்த ஆட்டத்தில் அயர்லாந்திடம் 1-0 என தோல்வி அடைந்தது. அமெரிக்கா உடனான ஆட்டம் 1-1 என டிராவானது.
அதையடுத்து நேற்று இரவு நடந்த பிளே ஆப் சுற்றில் இத்தாலியை சந்தித்தது இந்தியா. இதில் 3-0 என்ற கோல் கணக்கில் இந்திய பெண்கள் அணி அபாரமாக வென்றது.
9வது நிமிடத்திலேயே லாலரெம்சியாமி முதல் கோலை அடித்தார். 45வது நிமிடத்தில் நேகா கோயல் இரண்டாவது கோலையும், 55வது நிமிடத்தில் வந்தனா கட்டாரியா மூன்றாவது கோலையும் அடித்தனர்.
நாளை இரவு நடக்கும் கால் இறுதியில் அயர்லாந்து அணியை சந்திக்கிறது இந்தியா. மற்ற கால் இறுதி ஆட்டங்களில் இங்கிலாந்து - நெதர்லாந்து, ஆஸ்திரேலியா - அர்ஜென்டினா, ஜெர்மனி - ஸ்பெயின் அணிகள் மோதுகின்றன.
இந்த வெற்றியின் மூலம் 40 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா கால் இறுதிக்கு நுழைந்துள்ளது. 1978ல் நடந்த உலகக் கோப்பையில் இந்தியா 7வது இடத்தைப் பிடித்தது.


Click it and Unblock the Notifications