உலகக் கோப்பை ஹாக்கி - இன்று ஆஸி.யை சந்திக்கிறது இந்தியா

டெல்லியில் நடந்த வரும் உலகக் கோப்பை ஹாக்கிப் போட்டியில் இன்று இந்திய ரசிகர்களுக்கு முக்கியமான நாள். காரணம், வலுவான ஆஸ்திரேலியாவை சந்திக்கிறது இந்தியா.
கடந்த உலகக் கோப்பைப் போட்டிகளில் இதுவரை ஒரே ஒரு முறை முதல் சுற்றில் இந்தியா, ஆஸ்திரேலியாவை வென்றுள்ளது. அது 1978ம் ஆண்டு நடந்த போட்டியில். அப்போட்டியில், 2-0 என்ற கோல் கணக்கில் இந்தியா வெற்றி பெற்றிருந்தது. மற்ற உலகக் கோப்பைப் போட்டிகளில் இந்தியா, ஆஸ்திரேலியாவை வென்றதே இல்லை.
இருப்பினும் நடப்பு உலகக் கோப்பைப் போட்டியில் இந்தியா புது வீச்சுடன் கணக்கைத் தொடங்கியுள்ளது.
முதல் போட்டியில் வலுவான பாகிஸ்தானை 4-1 என்ற கோல் கணக்கில் அபாரமாக வீழ்த்தியதாலும், ஆஸ்திரேலியாவை இங்கிலாந்து 3-2 என்ற கணக்கில் வென்றுள்ளதாலும், இந்தியா நம்பிக்கையுடன் இன்று ஆஸ்திரேலியாவை சந்திக்கிறது.
இந்திய அணி முற்றிலும் புத்துணர்வுடன் உலகக் கோப்பைப் போட்டியில் பங்கேற்றுள்ளது. பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் கிட்டத்தட்ட அத்தனை வீரர்களும் அபாரமாக செயல்பட்டனர். திட்டமிட்டு, திறம்பட, ஒரே எண்ணத்துடன் அனைவரும் ஆடியதால் பாகிஸ்தானின் கட்டமைப்பைக் குலைத்து கோல்களை குவிக்க முடிந்தது.
அதே பாணியில் இன்றும் ஆஸ்திரேலியாவை வீழ்த்த இந்தியா தயாராகி வருகிறது. இந்தியாவின் நடுக்கள வீரர்கள் அபாரமான பார்மில் உள்ளனர். சந்தீப் சிங், பிரப்ஜோத் சிங், தனஞ்செய் மகதிக், விக்ரம் பிள்ளை, பரத் சிக்காரா, குர்பஜ் சிங் ஆகியோர் மிகத் திறமையாகவும், முழு வீச்சிலும் உள்ளனர்.
அதேசமயம், இன்றைய போட்டியில் நட்சத்திர வீரர் ஷிவேந்திரா சிங் இடம் பெற மாட்டார். அவருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் இந்திய அணிக்கு சற்று பலவீனம் ஏற்பட்டுள்ளது.
இருப்பினும் சந்தீப் சிங், பிரப்ஜோத் சிங் ஆகியோர் கோல்களைக் குவிப்பார்கள் என்ற நம்பிக்கையுடன் இந்தியா களம் இறங்குகிறது.
மறுபக்கம் ஆஸ்திரேலியா கடும் அதிர்ச்சியுடன் 2வது போட்டியில் இந்தியாவை சந்திக்கிறது. முதல் போட்டியி்ல் எதிர்பாராதவிதமாக இங்கிலாந்திடம் தோற்றுப் போனது ஆஸ்திரேலியா. கடந்த 25 ஆண்டுகளி்ல இங்கிலாந்திடம் அது தோல்வியைத் தழுவுவது இதுவே முதல் முறையாகும்.
கடந்த இரு உலகக் கோப்பைப் போட்டிகளிலும் இறுதிப் போட்டி வரை வந்து தோல்வியைத் தழுவியது ஆஸ்திரேலியா. இந்த முறை கோப்பைக் கனவுடன் டெல்லிக்கு வந்துள்ள ஆஸ்திரேலியா அணி, இன்றையப் போட்டியில் இந்தியாவை வென்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
மிகவும் வலிமை வாய்ந்த ஆஸ்திரேலியாவை எப்படி சமாளித்து இந்தியா வெற்றி கொள்ளப் போகிறது என்ற பெரும் எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர்.
இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான போட்டி இரவு 8.35 மணிக்கு டெல்லி தியான் சந்த் ஹாக்கி ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது.
இன்று..
இன்று நடைபெறும் மற்ற இரு போட்டிகளில் முதலில் தென் ஆப்பிரிக்காவும் - இங்கிலாந்தும் மோதுகின்றன. 2வது போட்டியில் பாகிஸ்தானும்- ஸ்பெயினும் சந்திக்கின்றன.
நேற்று...
முன்னதாக நேற்று நடந்த போட்டிகளில் நெதர்லாந்து அணி அர்ஜென்டினாவை 3-0 என்ற கோல் கணக்கில் படு தோல்வி அடையச் செய்தது.
நியூசிலாந்து கனடாவை 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.
ஜெர்மனி - கொரியா இடையிலான போட்டி 2-2 என்ற கோல் கணக்கில் டிரா ஆனது.
Story first published: Wednesday, December 7, 2011, 18:35 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications