சென்னை:
ஆசிய கோப்பை ஹாக்கிப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் விளையாட இந்தியா தகுதி பெற்றது. இன்று மாலை நடைபெறும் இறுதிப் போட்டியில் கொரியாவை இந்தியா சந்திக்கிறது.
சென்னையில் ஆசிய கோப்பைக்கான ஹாக்கிப் போட்டி நடந்து வருகிறது. இதில் ஆரம்பத்திலிருந்தே இந்தியா வெற்றிகளைக் குவித்து வருகிறது. நடப்புச் சாம்பியனான இந்தியா நேற்று நடந்த அரை இறுதிப் போட்டியில் ஜப்பானை சந்தித்தது.
இப்போட்டியில் ஜப்பானை அனைத்து விதங்களிலும் இந்திய வீரர்கள் ஒன்றுமில்லாமல் செய்து படு சிறப்பாக ஆடினார்கள். மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்த அரை இறுதிப் போட்டியில், 22வது நிமிடத்தில் இந்தியாவின் முதல் கோல் விழுந்தது. சிவேந்திர சிங் அதைப் போட்டார்.
அடுத்த கோலை பிரபோத் சிங் போட்டார். இந்திய வீரர்களின் ஒருங்கிணைந்த ஆட்டத்தால் 3வது கோல் வெகு எளிதாக கிடைத்தது. ரோஷன் மின்ஸ் இந்த கோலை அழகாக போட்டார்.
நான்காவது கோலை பிரபோத் சிங் போட்டார். போட்டி முழுவதும் பிரபோத் சிங், சர்தார் சிங், சிவேந்திர சிங் ஆகியோரின் ஆட்டம் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது.
ஜப்பான் தரப்பில் ஒரே ஒரு கோல் மட்டுமே போடப்பட்டது. இதன் மூலம் 4-1 என்ற கோல் கணக்கில் இந்தியா இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது.
இன்று மாலை 6.30 மணிக்கு நடக்கும் இறுதிப் போட்டியில், கொரியாவை இந்தியா சந்திக்கிறது. மற்றொரு அரை இறுதிப் போட்டியில், மலேசியாவை 2-1 என்ற கணக்கில் கொரியா வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.