ஷாங்காய்: ஆசிய சாம்பியன்ஸ் ட்ராபி ஹாக்கி போட்டியில் பாகிஸ்தான் அணியை இந்தியா வீழ்த்தியது. ஆசிய சாம்பியன்ஸ் ட்ராபி ஹாக்கி தொடர் சீனாவில் நடைபெற்று வருகிறது. இதில் லீக் சுற்றில் இந்தியா தனது கடைசி போட்டியில் பாகிஸ்தான் அணியை சந்தித்தது. இதற்கு முன் ஆடிய நான்கு போட்டிகளிலும் இந்திய அணி அபார வெற்றிகளை பெற்றிருந்தது. சீனா, ஜப்பான், மலேசியா மற்றும் கொரியா ஆகிய நான்கு அணிகளையும் இந்தியா வீழ்த்தி இருந்தது.
அடுத்து பாகிஸ்தான் அணியுடன் மோதியது இந்தியா. இந்தப் போட்டியில் 8 வது நிமிடத்திலேயே பாகிஸ்தான் அணி முதல் கோல் அடித்து இந்தியாவுக்கு அதிர்ச்சி அளித்தது. எனினும், சுதாரித்துக் கொண்ட இந்திய அணி 13 வது நிமிடத்தில் தனது முதல் கோலை அடித்து சமன் செய்தது. கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் முதல் கோலை அடித்திருந்தார். அவர் மீண்டும் 19 வது நிமிடத்தில் மற்றொரு கோலை அடித்தார்.

அதன்பின் இரண்டு அணிகளாலும் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை. எனினும், பாகிஸ்தான் அணி இந்தியாவுக்கு எதிராக டிரா செய்ய வேண்டும் என்று வெறியுடன் ஆடியது. அதே சமயம், இந்திய அணி தற்காப்பு ஆட்டத்தில் இறங்கி அபாரமாக பாகிஸ்தான் அணியை கட்டுக்குள் வைத்தது. கடைசி பத்து நிமிடங்களில் ஆட்டம் அனல் பறந்தது.
50 வது நிமிடத்தில் பாகிஸ்தான் அணியின் அஷ்ரப் ராணாவுக்கு மஞ்சள் நிற அட்டை காட்டப்பட்டது. இதை அடுத்து அவர் ஆடுகளத்தை விட்டு வெளியேற்றப்பட்டார். கடைசி 10 நிமிடங்களில் பாகிஸ்தான் அணி 10 வீரர்களுடன் ஆடியது. இந்தியா ரெஃப்ரீயிடம் புகார் அளித்தே பாகிஸ்தான் அணியை இந்த இக்கட்டான நிலையில் சிக்க வைத்தது.
58 வது நிமிடத்தில் இந்தியாவின் மன்பிரீத் சிங் பாகிஸ்தான் கோல் அடிக்க முயன்ற நிலையில் குறுக்கே புகுந்து தடுத்தார். அதற்கு பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்த அவருக்கு மஞ்சள் நிற அட்டை காட்டப்பட்டது. எனினும், அடுத்த இரண்டு நிமிடங்களில் போட்டி முடிவுக்கு வந்தது. இந்தியா 2 - 1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இதை அடுத்து ஆசிய சாம்பியன்ஸ் டிராபி தொடரில் லீக் சுற்றில் இந்தியா முதல் இடத்தை பெற்றது.