கண்ணாடிய திருப்பினா வண்டி எப்படி ஓடும்.... ஓடும் என்கிறது ஹாக்கி கூட்டமைப்பு!
டெல்லி: ஆட்டோவில் கண்ணாடியைத் திருப்பினா, வண்டி எப்படி ஓடும். ஓடாது ஜீவா என்பது ஒரு படத்தில் வரும் காமெடி சீனாக இருக்கலாம். ஆனால், அந்த காமெடி சீனை, அடிக்கடி சீரியசாக பார்ப்பதில் இந்திய ஹாக்கி கூட்டமைப்பு நிர்வாகிகள் கில்லாடிகள். கடந்தாண்டு நவம்பரில் ஹாக்கி அணியின் கோச்சாக நியமிக்கப்பட்ட நெதர்லாந்தின் ஜோயர்டு மரிஜ்னேவை நீக்குவது குறித்து தற்போது ஆலோசனை நடந்து வருகிறது.
இந்தாண்டு துவக்கத்தில் இருந்து இந்திய ஹாக்கி அணி சரியான முறையில் செயல்படவில்லை. சுல்தான் அஸ்லான் ஷா கோப்பையை கோட்டைவிட்ட ஹாக்கி அணி, காமன்வெல்த் போட்டியிலும் சொதப்பியது.
காமன்வெல்த் போட்டியில் இந்தியா பதக்க வேட்டை நடத்திய நிலையில், தங்கம் வென்று வரும் என்று நினைத்த ஹாக்கி அணி, நான்காவது இடத்தையே பிடித்தது. முதல்முறையாக காமன்வெல்த்தில் ஹாக்கி அணிக்கு பதக்கம் ஏதும் கிடைக்கவில்லை.
இந்திய ஹாக்கி அணியின் தோல்விகள் குறித்து இந்திய ஹாக்கி கூட்டமைப்பு நிர்வாகிகள் ரூம் போட்டு யோசித்துள்ளனர். எதனால் இந்த தோல்வி, இதற்கு என்ன செய்யலாம் என்று யோசித்துள்ளனர்.

6 மாதத்துக்குள் மாற்றம்
அவர்களுக்கு தெரிந்த ஒரே விஷயம் உடனடியாக கோச்சை மாற்றுவதுதான். அதுதான் தற்போதும் நடக்க உள்ளது. கடந்தாண்டு நவம்பரில்தான் ஆடவர் அணியின் கோச்சாக ஜோயர்டு மரிஜ்னே நியமிக்கப்பட்டார்.

தொடர்ந்து போட்டிகள்
அடுத்ததாக சாம்பியன்ஸ் கோப்பை, ஆசியக் கோப்பை மற்றும் இந்தாண்டு இறுதியில் இந்தியாவில் ஹாக்கி உலகக் கோப்பை போட்டி நடக்க உள்ளன. இந்த நிலையில், அணியை வலுப்படுத்த கோச்சை மாற்றுவது குறித்து ஹாக்கி நிர்வாகிகள் ஆலோசனை செய்து வருகின்றனர்.

25வது பயிற்சியாளர் யார்
கடந்த, 23 ஆண்டுகளால், 24 கோச்கள் என்ற அபார சாதனையை இந்திய ஹாக்கி நிர்வாகம் புரிந்துள்ளது. அதில், கடைசி நான்கு ஆண்டுகளில், ஐந்து வெளிநாட்டு கோச்களை பார்த்துள்ளது. கடந்தாண்டு நவம்பரில் நெதர்லாந்தைச் சேர்ந்த ரோலண்ட் ஓல்ட்மான்ஸ் நீக்கப்பட்டார். அவருக்கு பதிலாக மரிஜ்னே நியமிக்கப்பட்டார். தற்போது 25வது பயிற்சியாளரை தேடுகிறார்கள்.

என்னம்மா சிந்திக்கிறாங்கப்பா
காமன்வெல்த் போட்டி முடிந்து 15 நாட்களாகும் நிலையில், ஹாக்கி அணிக்கான பயிற்சிகள், பெங்களூருவில் நேற்று துவங்கியது. இந்த பயிற்சியின்போது, ஹாக்கி அணியின் கேப்டனாக கோல் கீப்பர் ஸ்ரீஜேஷ் அறிவிக்கப்பட்டார். வழக்கமாக ஒவ்வொரு போட்டியின்போதும் கேப்டன், வீரர்கள் அறிவிக்கப்படுவார்கள். ஆனால், இந்தாண்டு முழுவதும் ஸ்ரீஜேஷ் கேப்டனாக இருப்பார் என்று அறிவித்துள்ளனர். இதைவிடக் கொடுமை என்னவென்றால், கோச் மரிஜ்னேவுக்கு அழைப்பு விடுக்காமல், அணியை பயிற்சிக்கு அழைத்துள்ளனர். அதனால், கோச் மாற்றப்படுவது கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது.


Click it and Unblock the Notifications