ஆர்டாஸ்: ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி தொடரில் இந்தியா, பாகிஸ்தானுடனான இறுதிப் போட்டியில் வெற்றிப் பெற்று, கோப்பையை வென்றது.
சீனாவில் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பைக்கான, ஹாக்கி தொடர் நடந்து வந்தது. இதில், இந்தியா, பாகிஸ்தான், தென் கொரியா, சீனா, மலேசியா, ஜப்பான் உள்ளிட்ட 6 நாடுகள் பங்கேற்றன. லீக் போட்டிகளில் 3 டிரா மற்றும் 2 வெற்றிகளை பதிவு செய்த இந்திய அணி, புள்ளிப்பட்டியலில் 2வது இடத்தை பிடித்தது.
நேற்று நடந்த இறுதிப்போட்டியில், புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் இருந்த பாகிஸ்தான் அணியுடன் இந்தியா மோதியது. இரு அணியினரும் தொடக்க முதலே மிகவும் துடிப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் இருதரப்பும் கோல் போடவில்லை.
முதல் பாதியில் கோல் எதுவும் போடாத நிலையில், 2வது பாதியிலும் இரு அணியினரும் கோல் அடிக்கவில்லை. இதனால், ஆட்டம் மேலும் 15 நிமிடம் நீட்டிக்கப்பட்டது. அந்த முயற்சியும் தோல்வி அடைந்ததை தொடர்ந்து, இரு அணிகளுக்கும் பெனால்ட்டி ஷாட்கள் கொடுக்கப்பட்டன.
இதில் பாகிஸ்தான் தரப்பில், 2 கோல்கள் மட்டுமே அடிக்கப்பட்டது. ஆனால், இந்திய தரப்பில் ராஜ்பால் சிங், யுவராஜ் வால்மீகி, சர்வன்ஜித் சிங், தானிஷ் முஸ்தபா ஆகிய 4 பேரும் கோல் அடித்தனர். இதையடுத்து 4-2 என்ற கோல் கணக்கில் இந்தியா வென்று கோப்பையைக் கைப்பற்றியது.
கேப்டன் ராஜ்பால் சிங் தலைமையிலான இந்திய அணியில் இளம் வீரர்கள் அதிகம் இடம் பெற்றிருந்த நிலையில், ஆசிய கோப்பை கைப்பற்றி இருப்பது பெருமை அளிக்கிறது. கிரிக்கெட் போட்டியில் ஒருநாள் தொடரை இழந்தாலும், ஹாக்கி போட்டியில் வெற்றிப் பெற்றுள்ளதால், ரசிகர்களின் சோகம் சற்று குறைந்துள்ளது.