ஹாக்கிக்கு கெளரவம் - ஒலிம்பிக் சங்கம் கோரிக்கை
டெல்லி:
தேசிய விளையாட்டான ஹாக்கிக்கு, கிரிக்கெட் விளையாட்டுக்கு அளிக்கப்படும் அதே அளவிலான கெளரவம், அங்கீகாரம், மரியாதை அளிக்கப்பட வேண்டும் என இந்திய ஒலிம்பிக் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணிக்கு அளிக்கப்படும் அளவுக்கு மீறிய கெளரவம், பரிசுகள், முக்கியத்துவத்திற்கு நாடு முழுவதும் பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன.
அதிலும், 20-20 கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்றதற்காக இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு கோடிக்கணக்கில் பரிசுகளைக் கொட்டிக் கொடுத்துள்ளது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இதைக் கண்டு இந்திய ஹாக்கி வீரர்கள் கொதித்துப் போயுள்ளனர். கர்நாடகத்தைச் சேர்ந்த நான்கு ஹாக்கி வீரர்களும், அம்மாநிலத்தைச் சேர்ந்த ஹாக்கி மேனேஜரும், முதல்வர் குமாரசாமி வீடு முன்பு உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
நிலைமை மோசமாவதை உணர்ந்த கர்நாடக அரசு, ஹாக்கி வீரர்களுக்கு தலா ரூ. 2 லட்சம் பரிசுத் தொகையை அறிவித்தது.
இந்த நிலையில், இந்தியாவின் முதன்மை விளையாட்டு அமைப்பான இந்திய ஒலிம்பிக் சங்கம், ஹாக்கி வீரர்களுக்கு ஆதரவாக உரத்த குரல் எழுப்பியுள்ளது.
இதுதொடர்பாக இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் சுரேஷ் கல்மாடி, செயலாளர் ரந்தீர் சிங் ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில், இந்திய ஹாக்கி அணியைச் சேர்ந்த சில முன்னணி வீரர்கள் தாங்கள் அனாதைகள் போல நடத்தப்படுவதாகவும், மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்தப்படுவதாகவும், உரிய அங்கீகாரம் வழங்கப்படுவதில்லை எனவும் கூறியுள்ள குற்றச்சாட்டுக்களை ஒலிம்பிக் சங்கம் முழுமையாக ஆதரிக்கிறது.
ஹாக்கி, நமது நாட்டின் தேசிய விளையாட்டு. எனவே அந்த விளையாட்டுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டியது கட்டாயமாகும். ஹாக்கியில் இந்தியா இழந்த பெருமையை மீட்க அனைத்துத் தரப்பிலிருந்தும் பேராதரவு வழங்கப்பட வேண்டும்.
சமீபத்தில் ஹாக்கி மற்றும் கால்பந்து அணிகள் மிகச் சிறந்த வெற்றிகளைப் பெற்றுள்ளன. சிறப்பாக விளையாடி வருகின்றன. மேலும், இந்திய துப்பாக்கிச் சூடும் வீரர்கள், வில் வித்தை வீரர்கள் சிறப்பான வெற்றியைப் பெற்றுள்ளனர்.
சர்வதேச அளவில் சிறந்த வெற்றியைப் பெறும் வீரர்கள், அவர்கள் எந்த விளையாட்டுப் பிரிவைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி, உரிய முறையில் கெளரவிக்கப்பட வேண்டும். இதில் மாற்றுக் கருத்துக்கோ, பாரபட்சத்திற்கோ இடமே கிடையாது.
நமது நாட்டுக்குப் பெருமை சேர்க்கும் விளையாடி வெற்றி பெறும் வீரர்கள் கெளரவிக்கப்பட வேண்டும்.
ஆனால் இன்று என்ன நடக்கிறது. 20-20 உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ள இந்திய அணியை நாடே சேர்ந்து கொண்டாடிக் கொண்டிருக்கிறது. ஆனால் ஒலிம்பிக் போட்டிகளில் நமது நாட்டுக்குப் பெருமை சேர்த்த வீரர்களை, அந்தத் தருணங்களைக் கொண்டாட நாம் தவறி விட்டோம். அவர்களுக்கு உரிய அங்கீகாரத்தை வழங்க மறந்து விட்டோம்.
நாட்டில் உள்ள அனைத்து விளையாட்டு விரும்பிகள், நிறுவனங்கள், மத்திய, மாநில அரசுகளை நாங்கள் கேட்டுக் கொள்வதெல்லாம், கிரிக்கெட்டுக்குத் தரும் அதே அங்கீகாரத்தை, மரியாதையை, கெளவரத்தை, ஊக்கத்தை பிற விளையாட்டுக்கும் அளியுங்கள்.
அனைத்து விளையாட்டு வீரர்களையும் சமமாக பாவியுங்கள். அனைவரும் ஒருங்கிணைந்து, விளையாட்டுத் துறையில் இந்தியா சூப்பர் பவர் நாடாக பாடுபட உறுதி எடுப்போம் என்று கூறியுள்ளனர்.
Story first published: Wednesday, December 7, 2011, 17:29 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications