இந்தியாவை வீழ்த்தி முதன் முறையாக அரையிறுதியில் நுழைந்த அயர்லாந்து!
லண்டன் : இங்கிலாந்தில் நடந்து வரும் பெண்கள் ஹாக்கி உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி ஆடிய காலிறுதிப் போட்டி நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில், இந்திய அணியை எதிர்த்து ஆடிய அயர்லாந்து அணி, இறுதியில் ஷூட்-அவுட் மூலம் வெற்றி பெற்றது.
சிறப்பாக அடி வந்த இந்திய பெண்கள் ஹாக்கி அணி தோல்வியை சந்தித்து தொடரில் இருந்து வெளியேறுகிறது. அயர்லாந்து இந்த தொடரில் பங்கேற்ற அணிகளில் இரண்டாவது குறைந்த ரேங்க் உடைய அணியாக ஆரம்பித்து, தற்போது அரையிறுதிக்கு தகுதி பெற்று அசத்தியுள்ளது.
அதேசமயம், சிறப்பாக ஆடியும் ஷூட்-அவுட் முறையில் அரையிறுதி வாய்ப்பை நழுவ விட்டது இந்திய அணி. ஏற்கனவே, சாம்பியன்ஸ் ட்ராபி தொடரின் இறுதிப் போட்டியில், இந்திய ஆண்கள் அணி, ஆஸ்திரேலியாவிடம் ஷூட்-அவுட் முறையில் தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.

பறிபோன கோல் வாய்ப்புகள்
காலிறுதி ஆட்டத்தின் முதல் கால் பகுதியில், இரண்டு அணிகளுக்கும் எந்த கோல் அடிக்கும் வாய்ப்பும் கிடைக்கவில்லை. இந்திய அணி அயர்லாந்தை தடுப்பதில் சிறப்பாக செயல்பட்டது. இரண்டாவது கால் பகுதியில், ஆட்டத்தின் 23வது நிமிடத்தில் அயர்லாந்து அணியின் ப்ளானகன் கோல் அடிக்க முற்பட, அதை லாவகமாக தடுத்தார் இந்திய அணியின் கோல் கீப்பர் சவிதா. இந்திய அணியினர் கோல் போஸ்ட் பகுதிக்கு அருகில் சில முறை சென்றும் கோல் அடிக்க முடியவில்லை.

ஒரே ஒரு பெனால்டி வாய்ப்பு
ஆட்டத்தின் 49வது நிமிடம் இந்திய அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. இந்திய அணியின் கேப்டன் ராணி அடித்த பந்தை எளிதாக தடுத்தார் அயர்லாந்தின் கோல் கீப்பர் அயேஷா மேக்பெர்ரன். இது மட்டுமே ஆட்டத்தின் ஒரே ஒரு பெனால்டி வாய்ப்பாகும். ஆட்டத்தின் இறுதியில், இரண்டு அணிகளும் கோல்கள் அடிக்கவில்லை. இதையடுத்து, வெற்றியை நிர்ணயிக்கும் ஷூட்-அவுட்டுக்கு ஆட்டம் சென்றது.

ஷூட்-அவுட்டில் மோசம்
ஷூட்-அவுட்டில் இந்திய அணியில் ரீனா மட்டுமே ஒரு கோல் அடித்தார். மற்ற மூன்று வாய்ப்புகளில் கோல் அடிக்கவில்லை. அயர்லாந்து அணி, ஐந்து வாய்ப்புகளில் மூன்று கோல் அடித்து வெற்றி பெற்று, அரையிறுதியில் நுழைந்தது. இதுவே, அயர்லாந்து பெண்கள் அணியின் முதல் அரையிறுதி வாய்ப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

அரை இறுதியில் அயர்லாந்து -ஸ்பெயின்
மற்றொரு காலிறுதியில், போட்டியை நடத்தி வரும் இங்கிலாந்தின் பெண்கள் அணி, நெதர்லாந்திடம் தோல்வி அடைந்தது. நெதர்லாந்து, ஆஸ்திரேலியாவை அரையிறுதியில் சந்திக்கிறது. அயர்லாந்து பெண்கள் அணி, அரையிறுதியில் ஸ்பெயினை சந்திக்க உள்ளது.


Click it and Unblock the Notifications