பாரிஸ்: ஒலிம்பிக் ஹாக்கி போட்டியின் காலிறுதி சுற்றில் இந்திய அணி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறி சாதனை படைத்துள்ளது. இந்தியா - பிரிட்டன் இடையிலான காலிறுதி ஆட்டம் நடைபெற்றது. இந்தப் போட்டியின் 13வது நிமிடத்தில் இந்திய வீரர் அமித் ரோஹித் தாஸ் செய்த தவறு காரணமாக அவருக்கு ரெட் கார்ட் அளிக்கப்பட்டது.
அந்த வீடியோவில் இந்திய வீரர் அமித் ரோஹித் தாஸ் தனது ஹாக்கி ஸ்டிக்கால் இங்கிலாந்து வீரரின் முகத்தில் தாக்கியது தெரிய வந்தது. இதன் காரணமாக வெறும் 10 வீரர்களுடன் இந்திய அணி விளையாட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இந்தியாவின் முக்கியமான டிஃபென்ஸ் வீரராக இருந்த அமித் வெளியேற்றப்பட்டதால், இந்தியாவின் டிஃபென்ஸ் தடுமாறியது.

ஆனால் 10 வீரர்களோடு விளையாடினாலும் பிரிட்டன் அணியால் ஒரு கோலுக்கு மேல் அடிக்க முடியவில்லை. ஒவ்வொரு முறையும் பிரிட்டன் அணி D வளையத்திற்குள் வந்த போதும், ஒட்டுமொத்த இந்திய வீரர்களும் அசாத்தியமாக செயல்பட்டு தடுத்து நிறுத்தினர். ஆனால் கடைசி நேரத்தில் இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்து இருந்ததால், வெற்றியாளரை தேர்வு செய்வதற்கு ஷூட் அவுட் முறை பின்பற்றப்பட்டது.
இரு அணிகளும் முதல் 2 கோல்களை எளிதாக அடித்த நிலையில், 3வது முறையாக பிரிட்டன் வீரர் வில்லியம்சனின் ஷாட்டை ஸ்ரீஜேஷ் தடுத்து நிறுத்தினார். தொடர்ந்து இந்திய வீரர் லலித் புத்திசாலித்தனமாக டிரிஃப்ட் செய்து 3வது கோலை அடிக்க, இன்னும் ஒரேயொரு ஷாட்டை மட்டும் தடுத்தால் இந்தியாவின் வெற்றி கிட்டத்தட்ட உறுதியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
அதற்கேற்ப இங்கிலாந்து அணியின் ரூப்பர் கொஞ்சம் தள்ளிச் சென்று கோல் அடிக்க முயன்ற போது, ஸ்ரீஜேஷ் அப்போதும் விடவில்லை. இதனால் அவர் அடித்த பந்து கோல் போஸ்ட்-க்கு வெளியில் சென்றது. இதன்பின் இந்தியாவின் ராஜ்குமார் பால் அசத்தலாக ஒரு கோலை அடித்து 4-2 என்ற கணக்கில் இந்தியாவை வெற்றிபெற வைத்தார்.
எல்லைச்சாமியாக நின்று ஸ்ரீஜேஷ் இந்திய ஹாக்கி அணியை வெற்றி பெற வைத்துள்ளார். ஷூட் அவுட்டில் மட்டுமல்லாமல் டிஃபென்ஸ் பந்தை தடுத்து நிறுத்த முடியாத போதும் கூட ஸ்ரீஜேஷ் அசத்தலாக தடுத்து நிறுத்தினார். அவருக்கு இது 4வது ஒலிம்பிக் தொடர் என்பதால், இந்திய அணி தங்கப் பதக்கத்தை வெல்ல வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.