இதுதான் மரியாதையா? ஒலிம்பிக் பதக்கம் வென்ற ஹாக்கி வீரர்களுக்கு எகானமி சீட்.. கொதிக்கும் ரசிகர்கள்
பாரிஸ்: 2024 பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் இந்தியாவுக்கு வெண்கலப் பதக்கம் வென்று கொடுத்த இந்திய ஆடவர் ஹாக்கி அணி வீரர்கள் நாடு திரும்பிய போது வசதி குறைவான "எக்கானமி" இருக்கைகளில் அமர்ந்து பயணம் செய்தனர். இதை பலரும் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.
2024 டி20 உலகக் கோப்பை வென்ற இந்திய அணிக்கு தனி விமானம் ஏற்பாடு செய்ததை ஒப்பிட்டு விமர்சனம் செய்து வருகின்றனர் இணையவாசிகள். 2024 டி20 உலகக் கோப்பை வெஸ்ட் இண்டீஸ்-இல் நடைபெற்றது. அந்தத் தொடர் முடிந்த பின் இறுதிப் போட்டி நடைபெற்ற பார்படோஸ் நாட்டில் புயல் பாதிப்பின் காரணமாக விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன.'

அப்போது பிசிசிஐ அமைப்பு தனி விமானம் ஒன்றை ஏற்பாடு செய்து, அதில் இந்திய வீரர்களை அழைத்து வந்தது. அதே சமயம் ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு பதக்கம் வென்று கொடுத்த ஹாக்கி அணி வீரர்கள் மலிவு விலை டிக்கெட்டில், வசதி குறைபாடுகளுடன் விமானத்தில் 8 மணி நேரம் 20 நிமிடம் பயணம் செய்ய வேண்டிய அவல நிலையில் இருப்பதாக பலரும் சுட்டிக்காட்டி வருகின்றனர்.
மேலும், அந்த விமானத்தில் ஹாக்கி வீரர்களுக்கு அருகருகே இருக்கைகள் கிடைக்கவில்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாக ஹாக்கி வீரர்கள் மாற்றி, மாற்றி அமர வைக்கப்பட்டு இருந்தனர். அவர்களுடன் மற்ற விளையாட்டுக்களில் பங்கேற்ற இந்திய வீரர், வீராங்கனைகளும் பயணம் செய்தனர்.
குறிப்பாக ஹாக்கி அணியின் கோல் கீப்பர் ஸ்ரீஜேஷ் இந்த விமானத்தில் தான் பயணம் செய்தார். அவர் ஒலிம்பிக் நிறைவு விழாவில் இந்திய தேசிய கொடியை ஏந்தி செல்லும் வாய்ப்பை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. கிரிக்கெட்டுக்கு ஒரு நீதி ஹாக்கிக்கு ஒரு நீதியா? என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்திய அரசு ஒலிம்பிக் வீரர்களை சரியான முறையில் நடத்தவில்லை எனவும் சிலர் கூறியுள்ளனர்.


Click it and Unblock the Notifications