Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஒலிம்பிக் - "பரட்டு ரவீந்திரன் ஸ்ரீஜேஷ்".. யார் இவர்? இந்திய ஹாக்கியில் அவர் செய்த சாதனைகள் என்ன?

பாரிஸ்: 2024 பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் இந்திய ஹாக்கி அணி ஸ்பெயின் அணியை 2 - 1 என வீழ்த்தி வெண்கலப் பதக்கம் வென்று இருக்கிறது. இந்த நிலையில், இந்தப் போட்டியுடன் சர்வதேச ஹாக்கி விளையாட்டில் இருந்து ஓய்வை அறிவித்திருக்கிறார் இந்திய அணியின் கோல் கீப்பர் பி ஆர் ஸ்ரீஜேஷ்.

இந்தப் போட்டிக்கு முன்னதாக "இந்திய நவீன ஹாக்கியின் கடவுள்" என ஹாக்கி இந்தியா அமைப்பு ஸ்ரீஜேஷை பாராட்டி இருக்கிறது. மேலும், வெண்கல பதக்கத்துக்கான ஒலிம்பிக் போட்டியில் ஸ்பெயின் அணிய வீழ்த்திய பின் ஸ்ரீஜேஷ் முன் அனைத்து இந்திய ஹாக்கி அணி வீரர்களும் தலை வணங்கினார்கள். கேப்டன் ஹர்மன்ப்ரீத் அவரை தனது தோள்களில் சுமந்து சென்றார். இப்படி இந்திய ஹாக்கியில் கொண்டாடப்படும் ஸ்ரீஜேஷ் பற்றி நம்மில் பலருக்கு தெரியாது. அவர் இந்திய ஹாக்கியில் என்ன சாதனைகளை செய்துள்ளார்? என்பது குறித்து பார்ப்போம்.

Olympics 2024 Paris Olympics 2024 hockey 2024

"பரட்டு ரவீந்திரன் ஸ்ரீஜேஷ்" என்பதன் சுருக்கம் தான் பி ஆர் ஸ்ரீஜேஷ். இவர் 1988 ஆம் ஆண்டு கேரளா மாநிலம் கொச்சியில் பிறந்தார். இவர் பள்ளிப் பருவத்தில் நீளம் தாண்டுதல் மற்றும் வாலிபால் ஆகிய விளையாட்டுகளில் ஈடுபட்டு வந்தார். அதன் பின்னர் பயிற்சியாளர் ஒருவர் இவரை ஹாக்கி விளையாட்டில் கோல்கீப்பிங் செய்யுமாறு கூறி இருக்கிறார். அதை ஏற்று ஹாக்கி விளையாட்டில் கோல் கீப்பராக பயிற்சி பெற்றார்.

பின்னர், பள்ளி அளவிலான போட்டிகள் மற்றும் மாநில அளவிலான ஹாக்கி போட்டிகளில் பங்கேற்று தனது சிறப்பான செயல்பாடுகளின் காரணமாக இந்திய ஹாக்கி அணியில் இடம் பிடித்தார் ஸ்ரீஜேஷ். 2006 ஆம் ஆண்டு முதல் இந்திய ஹாக்கி அணியில் இடம் பெற்று வந்தார். ஆனால், அப்போது கோல் கீப்பர்களாக மூத்த வீரர்கள் இருந்ததால், இவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

2011 ஆம் ஆண்டு முதல் ஸ்ரீஜேஷ் இந்திய ஹாக்கி அணியின் நிரந்தர கோல் கீப்பராக மாறினார். 2013 ஆசியக் கோப்பையில் அவர் அந்தத் தொடரின் சிறந்த கோல் கீப்பருக்கான விருதை வென்றார். எதிரணியை கோல் போட விடாமல் செய்வதில் ஸ்ரீஜேஷ் கைதேர்ந்தவராக இருந்தார். இந்திய ஹாக்கியின் தடுப்புச் சுவர் என்ற பட்டப் பெயரால் இவரை ரசிகர்கள் அழைத்தனர்.

இந்திய அணியின் மற்ற பத்து வீரர்களும் சேர்ந்து அடிக்கும் கோல்களின் எண்ணிக்கையை விட, ஸ்ரீஜேஷ் தனி ஆளாக தடுத்த கோல்களின் எண்ணிக்கை அதிகம். அவரது முக்கியத்துவத்தை உணர்ந்த இந்திய ஹாக்கி அமைப்பு மற்றும் சக வீரர்கள் அவர் அணியின் மறுக்க முடியாத ஒரு வீரர் என்பதை உணர்ந்தனர். அவருக்கு அணியில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.

பின்னர் 2016 ஆம் ஆண்டு அப்போதைய கேப்டன் சர்தார் சிங் பதவியில் இருந்து விலகிய பின், ஸ்ரீஜேஷ் கேப்டன் பதவியை பெற்றார். 2016 ரியோ ஒலிம்பிக் தொடரில் ஸ்ரீஜேஷ் தலைமையில் பங்கேற்ற இந்திய அணி கால் இறுதி சுற்று வரை முன்னேறியது. சில ஆண்டுகளுக்கு பின்னர் அவர் கேப்டன் பதவியில் இருந்து விலகினார்.

2021 டோக்கியோ ஒலிம்பிக்கில் ஜெர்மனி அணிக்கு எதிரான வெண்கல பதக்கப் போட்டியில் ஸ்ரீஜேஷ் கடைசி நேரத்தில் தடுத்த கோலின் காரணமாக இந்தியா வெற்றி பெற்றது. ஒலிம்பிக் தொடரில் 41 ஆண்டுகளுக்குப் பின் ஹாக்கி விளையாட்டில் இந்தியா பதக்கம் வென்று வரலாறு படைத்தது.

அதற்கு காரணமான ஸ்ரீஜேஷ்-க்கு இந்தியாவின் உயரிய விளையாட்டு விருதான கேல் ரத்னா விருது அளிக்கப்பட்டது. 2022 காமன்வெல்த் விளையாட்டில் வெள்ளிப் பதக்கம், 2022 ஆசிய விளையாட்டில் தங்கப்பதக்கம், 2023 ஆசிய சாம்பியன்ஸ் டிராபி தொடரில் சாம்பியன் பட்டம் என தொடர்ந்து இந்திய ஹாக்கி அணி வெற்றிகளை குவித்து வந்த நிலையில், அதில் தனது கடமையை சிறப்பாக செய்து இருந்தார் ஸ்ரீஜேஷ்.

இந்த நிலையில், 2024 பாரிஸ் ஒலிம்பிக் தொடருக்கு முன்னதாக ஸ்ரீஜேஷ் தனது ஓய்வை அறிவித்தார். ஒலிம்பிக் தொடருடன் தான் ஹாக்கி விளையாட்டில் இருந்து விடை பெறுவதாக அறிவித்தார். இதை அடுத்து ஸ்ரீஜேஷ்-க்காக இந்திய ஹாக்கி அணி பதக்கம் வெல்ல வேண்டும் என அனைவரும் எதிர்பார்த்தனர். வெள்ளி அல்லது தங்கப்பதக்கம் வெல்ல முடியாவிட்டாலும், 2024 ஒலிம்பிக் தொடரில் ஸ்பெயின் அணியை வீழ்த்தி இந்தியா வெண்கலப் பதக்கம் வென்று இருக்கிறது. இந்த வெற்றியுடன் ஸ்ரீஜேஷ் இந்திய ஹாக்கி அணியில் இருந்து விடை பெற்றார்.

Story first published: Thursday, August 8, 2024, 20:07 [IST]
Other articles published on Aug 8, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+