இன்று இறுதி: டோணியின் 'டி-20 டெக்னிக்' இலங்கையிடம் எடுபடுமா?

ஆசியக் கோப்பை கிரிக்கெட்டின் இறுதிப் போட்டி கராச்சி நகரில் நடக்கிறது. இந்திய-இலங்கை அணிகள் மோதும் இந்தப் போட்டியில் அவர் ஜெயித்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.
கபில் தேவுக்குப் பிந்தைய இந்திய அணி பல அம்சங்களிலும் ரசிகர்களை ஏமாற்றும் வித்த்திலேயே செயல்பட்டு வந்துள்ளது. இறுதிப் போட்டி வரை யானை பலத்தோடு எதிரணிகளை துவம்சம் செய்வதும், இறுதிப் போட்டியில் சோப்ளாங்கி அணியிடம் தோற்று, கோப்பையை கோட்டை விட்டுத் திரும்புவதும்தான் 15 ஆண்டு காலமாக இந்திய அணியின் சரித்திரமாக இருந்து வருகிறது.
எப்போதாவது ஒரு போட்டியில் ஜெயிப்பார்கள். அது கூட கோடிக்கணக்கான ரசிகர்களின் கனவை நனவாக்க அல்ல. அந்த வெற்றியின் தயவில் சில ஆண்டுகள் விளம்பரத்தில் ஜொலிக்க வேண்டுமல்லவா...!
டோணி போன்ற இளம் ரத்தங்கள் வந்த பிறகு அணிக்குள் சற்றே பாஸிடிவ் அப்ரோச் தெரிந்தாலும், வெற்றி விகிதம் பெரிதாக மெச்சிக் கொள்ளும் அளவுக்கு இல்லை.
இருபது ஓவர் உலகக் கோப்பையை வென்று வந்த பிறகு டோணி அதிகம் பேசிக்கொண்டே இருந்துவிட்டார். அதை உணர்ந்துதானோ என்னமோ இந்த ஆசியக் கோப்பை ஆட்டங்களில் ஓரளவு நன்கு விளையாடி வருகிறார். முக்கிய வெற்றிகளில் அவரின் பங்களிப்பு மெச்சும் விதத்தில் உள்ளது.
இந்த நிலை இன்றைய போட்டியிலும் தொடருமா... பார்க்கலாம்.
இந்தியாவை இறுதிப் போட்டிகளில் பலமுறை வென்றிருக்கிறது இலங்கை. எனவே அதே நம்பிக்கையுடனும் தனது நட்சத்திர வீரர்களுடனும் களமிறங்குகிறது.
கராச்சி மைதானம் முன்பு மாதிரி இல்லை. இப்போது பந்துவீச்சாளர்கள் வெறுத்துப் போகும் அளவுக்கு ஸ்லோவாகிவிட்டது பிட்ச். எனவே 300 ரன்களுக்குள் எதிரணியைக் கட்டுப்படுத்துவது சிரமம்தான். ஆரம்பத்திலேயே விக்கெட்டுகளை வீழ்த்தி, ரன் விகிதத்தைக் கட்டுப் படுத்துகிற ஜெயசூர்யாவின் டெக்னிக்கையே நாமும் கடைப்பிடித்தால் ஓரளவு பலன் கிடைக்கலாம்.
அதே நேரம் இருபது ஓவர் கிரிக்கெட் டெக்னிக்கையே இந்த ஒரு நாள் போட்டிகளிலும் அப்ளை செய்து பார்க்கும் டோணியின் ஆர்வம் ஆபத்தாகவும் முடியலாம். எச்சரிக்கையுடன் ஆட வேண்டும்.
இன்று மாலை 3.30 மணிக்கு இறுதிப் போட்டி தொடங்குகிறது. இதனை தூர்தர்ஷன் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.
Story first published: Wednesday, December 7, 2011, 17:17 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications