இந்திய ஹாக்கி அணிக்கு ஜனாதிபதி மாளிகையில் பாராட்டு
ஹைதராபாத்:
ஆசிய கோப்பை ஹாக்கி சாம்பியன் பட்டத்தை வென்ற இந்திய ஹாக்கி அணி வீரர்களுக்கு டெல்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் பாராட்டு விழா நடத்தப்படவுள்ளது.
20-20 உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி சாம்பியன் ஆனதைத் தொடர்ந்து அவர்களுக்கு கோடிக்கணக்கில் பரிசுகள் அறிவிக்கப்பட்டன. வீரர்களுக்கு பண மழை பொழிந்தது. மும்பைக்கு அவர்கள் திரும்பியபோது நகரமே ஸ்தம்பிக்கும் வகையில் திறந்த பேருந்தில் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டு கெளரவிக்கப்பட்டனர்.
இதைப் பார்த்து மற்ற விளையாட்டு வீரர்கள், ரசிகர்கள் கொந்தளித்தனர். தேசிய விளையாட்டான ஹாக்கியை இந்திய அரசும், பிறரும் புறக்கணிக்கிறார்கள். ஆசிய கோப்பையை இந்திய ஹாக்கி அணி வென்றபோது யாருமே பாராட்டவில்லை, பண மழை பொழியவில்லை, கெளரவப்படுத்தவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.
கர்நாடகத்தைச் சேர்ந்த ஹாக்கி வீரர்கள் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கப் போவதாகவும் மிரட்டினர்.
இந்த நிலையில், ஒரு வழியாக இந்திய ஹாக்கி அணியினருக்கு கெளரவம் கிடைத்துள்ளது. குடியரசுத் தலைவர் மாளிகையில் ஆசியக் கோப்பையை வென்ற இந்திய ஹாக்கி வீரர்களுக்குப் பாராட்டு விழா நடத்தப்படவுள்ளது.
இதுதவிர மேலும் சில பாராட்டு விழாக்களுக்கும் ஹாக்கி அணிக்குக் காத்துள்ளன.
இந்தி நடிகரும், எம்.பியுமான ராஜ் பாபர், ஆக்ராவில் அக்டோபர் 30ம் தேதி இந்திய ஹாக்கி அணி வீரர்களுக்குப் பாராட்டு விழா நடத்துகிறார்.
நவம்பர் 1ம் தேதி குடியரசுத் தலைவர் மாளிகையில் பாராட்டு விழா நடைபெறுகிறது.
நவம்பர் 3ம் தேதி மும்பை ஹாக்கி சங்கம் பாராட்டு விழா நடத்துகிறது. மகாராஷ்டிர அரசும், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவும் நவம்பர் 5ம் தேதி பாராட்டு விழா நடத்துகின்றன.
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா சார்பில் வீரர்களுக்கு தலா ரூ. 5 லட்சம் பரிசு அளிக்கப்படுகிறது. மும்பை ஹாக்கி சங்கம் வீரர்களுக்கு தலா ரூ. 1 லட்சம் பரிசு வழங்குகிறது. பயிற்சியாளர் ஜோக்கிம் கார்வால்ஹோவுக்கு ரூ. 1.25 லட்சம் தரப்படுகிறது.
மும்பையில் நடக்கும் பாராட்டு விழாவில் 20-20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் இடம் பெற்றிருந்த மும்பை வீரர்களும் பங்கேற்கிறார்கள்.
குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல், தங்களைப் பாராட்ட அழைத்திருப்பது குறித்து கார்வால்ஹோ மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், குடியரசுத் தலைவரின் அழைப்பு எங்களை மகிழ்ச்சிப்படுத்தியுள்ளது, கெளரவப்படுத்தியுள்ளது.
ஒவ்வொரு வீரரும் அங்கீகரிக்கப்பட வேண்டும். வெற்றி பெறும்போது பாராட்டப்பட வேண்டும். கிரிக்கெட் அணியினர் சாதனை படைத்தனர், எனவே அவர்கள் பாராட்டப்பட்டார்கள், பரிசு வழங்கப்பட்டார்கள். அது சரியான நடவடிக்கைதான் என்றார்.
இருப்பினும் இந்திய ஹாக்கி அணியின் முக்கிய ஸ்பான்சரான சஹாரா நிறுவனம், இதுவரை ஆசிய கோப்பை பட்டத்தை வென்ற இந்திய அணியை கெளரவிக்காமல் இருப்பது குறித்து கார்வால்ஹோ அதிருப்தி தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுக்கு தலா ஒரு வீடு (ரூ. 25 லட்சம் மதிப்பில்) வழங்குவதாக சஹாரா நிறுவனம் அறிவித்துள்ளது. ஆனால் ஹாக்கி வீரர்கள் விஷயத்தில் அது மெளனமாக இருக்கிறது என்றார்.
Story first published: Wednesday, December 7, 2011, 17:30 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications