இபோ: அஸ்லான் ஷா ஹாக்கி தொடரில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய வீரர்கள் 14 ஆண்டுகளுக்கு கோப்பை வென்று, இந்திய ஹாக்கிக்கு புத்துயிர் அளித்துள்ளனர். இந்தியா இறுதிபோட்டியில் மலேசியாவை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.
உலகின் முக்கிய ஹாக்கி அணிகள் பங்கேற்ற அஸ்லான் ஷா ஹாக்கி தொடர் மலேசியாவின் இபோ நகரில் நடந்தது. இம்முறை சூப்பராக விளையாடிய இந்திய அணி கடைசி லீக் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி பைனலுக்கு முன்னேறியது.
நேற்று நடந்த பைனலில் இந்தியா, மலேசியா அணிகள் மோதின. ஏற்கனவே இந்திய அணி, லீக் சுற்றின் போது மலேசியாவை 3-0 என்ற கோல் கணக்கில் வென்றிருந்தது.
இந்த நம்பிக்கை கைகொடுக்க இந்திய வீரர்கள் துவக்கத்தில் இருந்தே ஆதிக்கம் செலுத்தினார்கள். இந்திய அணி சார்பில் முதல் பாதியில் அர்ஜூன் ஹாலப்பா, பிரபோத் சிங் தலா ஒரு கோல் போட்டனர். மலேசியாவும் ஒரு கோல் போட்டது. இதையடுத்து இந்தியா முதல் பாதியில் 2-1 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது.
இரண்டாவது பாதியில் சிவேந்திர சிங் ஒரு கோலடிக்க, இந்தியா 3-1 என்ற கோல் கணக்கில் வென்றது. இதன்மூலம் சுமார் 14 ஆண்டுகளுக்கு பின் அஸ்லான் ஹாக்கி தொடரை வென்றது. இந்திய அணி கடைசியாக 1995ல் கோப்பை வென்றிருந்தது.
இது இந்திய அணி கைப்பற்றும் நான்காவது அஸ்லான் ஷா கோப்பையாகும். முன்னதாக 1985, 1991, 1995 ஆகிய ஆண்டுகளில் கோப்பை வென்றிருந்தது.
ஜனாதிபதி கண்டுகொள்ளாதது ஏன்?
சமீபகாலமாக உலக கோப்பை தோல்வி, ஒலிம்பிக் தொடருக்கு தகுதி பெற முடியாமல் போனது என பெரும் பின்னடைவுகளை சந்தித்து வந்த ஹாக்கி அணி தடைகளை தாண்டி தற்போது சாதித்துள்ளது. இந்திய ஹாக்கியை எழுச்சி பாதை நோக்கி கொண்டு செல்ல துடிக்கிறது.
ஆனால், வீரர்களின் வளர்ச்சிக்கு தேவையான உற்சாக டானிக்கான பாராட்டு இவர்களுக்கு கிடைக்கவில்லை. இந்திய கிரிக்கெட் அணி சின்ன தொடரை வென்றால் கூட உடனடியாக பாராட்டும் ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் ஹாக்கி வீரர்களுக்கு எந்த பாராட்டு செய்தியும் கொடுக்கவில்லை.
தேர்தல் பிரசாரத்தில் பம்பரமாக சுழன்று வரும் சோனியாவுக்கு இந்திய அணி கோப்பை வென்றது தெரியுமா என்பது தெரியவில்லை. பிரதமர் மன்மோகன் மட்டும் போனால் போகுது என்று ஒப்புக்கு ஒரு வாழ்த்து செய்தி கொடுத்துள்ளார். அதில், இந்திய வீரர்களின் வெற்றி தொடர வேண்டும். இந்திய ஹாக்கி அதன் பொற்காலத்தை நோக்கி முன்னேறி வருகிறது என்றார்.
கிரிக்கெட் என்றால் ஓடிக் குதித்து வாழ்த்து சொல்லியிருப்பார்கள்...