
லண்டன் ஒலிம்பி்க் போட்டியில் நேற்று ஆண்களுக்கான ஹாக்கி போட்டி நடைபெற்றது. இதில் பி பிரிவை சேர்ந்த இந்தியா, நியூசிலாந்து அணிகள் நேற்று மோதின. போட்டியின் துவக்கத்தில், 2வது நிமிடத்திலேயே இந்திய அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. இதை பயன்படுத்திய வீரர் சந்தீப் சிங் முதல் கோலை அடித்தார்.
ஆனால் அதன்பிறகு சிறப்பாக ஆடிய நியூசிலாந்து அணி அடுத்தடுத்து கோல்களை அடித்தது. 12வது நிமிடத்தில் நியூசிலாந்திற்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பை பயன்படுத்திய ஆண்ட்ரூ ஹாய்வர்ட் ஒரு கோலை அடித்து, கோல் கணக்கை சமப்படுத்தினார்.
அதன்பிறகு 24வது நிமிடத்தில் நியூசிலாந்தின் பிலிப் புரோஸ், 29வது நிமிடத்தில் நிகோலஸ் வில்சன் ஆகியோர் அடுத்தடுத்து கோல்களை அடித்தனர். கோல் கணக்கை சமப்படுத்த இந்திய வீரர்கள் போராடியும், கடைசி வரை கோல் எதுவும் அடிக்க முடியவில்லை. இதனால் போட்டியின் முடிவில் நியூசிலாந்து அணி 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
ஒலிம்பிக் போட்டியில் அடுத்தடுத்து 2 போட்டிகளில் தோல்விகளை கண்டுள்ள இந்திய அணி, நாளை ஜெர்மனி உடன் மோத உள்ளது.