ஆசிய போட்டி: கபடியில் இந்திய ஆடவர், மகளிர் என இரு அணிகளும் துவம்சம்
மும்பை: ஜப்பானின் நாகோயாவில் நடைபெற்று வரும் 2026 ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்திய கபடி அணிகள் தங்களது தொடர் ஆதிக்கத்தை நிரூபித்து வருகின்றன. புதன்பிழமை நடைபெற்ற குரூப் சுற்று போட்டிகளில் இந்திய ஆடவர் மற்றும் மகளிர் கபடி அணிகள் முறையே வங்கதேசம் மற்றும் ஈரான் ஆகிய அணிகளுக்கு எதிராக அபார வெற்றிகளைப பதிவு செய்துள்ளன.
மகளிர் பிரிவில், கடந்த 2018 ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற பலம் வாய்ந்த ஈரான் அணியை, இந்திய மகளிர் அணி 37-23 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தி தங்களது இரண்டாவது குரூப் சுற்று வெற்றியைப் பதிவு செய்தது. மற்றொரு போட்டியில், இந்திய ஆடவர் அணி வங்கதேசத்தை 48-25 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தி தனது மூன்றாவது குரூப் 'ஏ' வெற்றியைப் பதிவு செய்தது.

இந்த சிறப்பான வெற்றி குறித்து பேசிய இந்திய மகளிர் கபடி அணியின் பயிற்சியாளர் நீதா தத்வே , "ஈரான் அணிக்கு எதிராக நாங்கள் தீவிரமாக வியூகம் வகுத்திருந்தோம். மைதானத்தில் ஆட்டம் மிகவும் விறுவிறுப்பாகவும் கடினமாகவும் இருந்தது. நாங்கள் 10 புள்ளிகளுக்கும் அதிகமான வித்தியாசத்தில் ஈரானை வீழ்த்துவது இதுவே முதல் முறையாகும். இதற்கு முன்பு நடைபெற்ற போட்டிகள் அனைத்தும் மிகவும் நெருக்கமான புள்ளிக் கணக்கிலேயே முடிந்துள்ளன" என்றார்.
உலக அரங்கில் இந்தியாவை யாரால் வீழ்த்த முடியும் என்ற கேள்விக்கு, "யாராலும் முடியாது, கபடியில் இந்தியாதான் எப்போதும் முதலிடம். இது நமது பாரம்பரிய விளையாட்டு, இந்தியாவில் உருவானது. எங்களிடம் சிறந்த தொழில்நுட்பம், வேகம் மற்றும் பலம் வாய்ந்த வீராங்கனைகளும் பயிற்சியாளர்களும் உள்ளனர். நாங்களே சிறந்தவர்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. அணியில் உள்ள அனைத்து வீராங்கனைகளும் சிறந்தவர்களே, குறிப்பாக பூஜா மற்றும் நிகிதா ஆகியோர் அணியின் நட்சத்திரங்களாக ஜொலிக்கிறார்கள்" என்று குறிப்பிட்டார்.
ஈரானுக்கு எதிரான ஆட்டத்தின் முதல் பாதியில் இந்திய மகளிர் அணி 19-15 என்ற புள்ளிக் கணக்கில் முன்னிலை பெற்றது. பின்னர் இரண்டாவது பாதியிலும் தங்களது ஆதிக்கத்தைத் தொடர்ந்த இந்திய வீராங்கனைகள், எதிரணியை முழுமையாக வீழ்த்தினர்.
ஆடவர் பிரிவில் இந்திய அணி ஆட்டத்தின் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தியது. முதல் பாதியிலேயே இந்திய ஆடவர் அணி 29-9 என்ற கணக்கில் முன்னிலையைப் பெற்றது. இரண்டாவது பாதியில் வங்கதேச அணி ஓரளவுக்குப் போராடி புள்ளிகளைப் பெற்ற போதிலும், இந்திய அணியின் வெற்றிக்கு அவர்களால் எந்த வகையிலும் முட்டுக்கட்டை போட முடியவில்லை. இறுதியில் 48-25 என்ற புள்ளிக் கணக்கில் இந்தியா வெற்றி பெற்றது.
இந்திய மகளிர் அணி தனது முதல் லீக் போட்டியில் வங்கதேசத்தை 42-21 என்ற கணக்கில் வென்றிருந்தது. ஆடவர் அணி ஜப்பானை 49-24 என்ற கணக்கிலும், தென் கொரியாவை 63-31 என்ற கணக்கிலும் முன்னதாக வீழ்த்தியிருந்தது.
தங்களது இறுதி குரூப் லீக் போட்டியில், இந்திய மகளிர் அணி வியாழக்கிழமை ஜப்பானை எதிர்கொள்கிறது. ஆடவர் அணி தனது கடைசி குரூப் போட்டியில் சீன தைபேயுடன் மோதுகிறது. கடந்த ஹாங்சோ ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்திய ஆடவர் மற்றும் மகளிர் அணிகள் இரண்டுமே தங்கம் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications


