கபடி உலகக் கோப்பையை 2வது முறையாக வென்ற இந்திய ஆடவர், மகளிர்
லூதியானா: லூதியானாவில் நடந்த கபடி உலக கோப்பை போட்டியின் இறுதி போட்டியில் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவுகளில் இந்தியாவே அபாரமாக வெற்றி பெற்று சாம்பியன் ஆனது. கடந்த ஆண்டும் இந்தியா உலகக் கோப்பையை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.
பஞ்சாப் மாநிலத்தின் லூதியானாவில் கபடி உலகக் கோப்பைப் போட்டி நடைப்பெற்றது. கடந்த ஆண்டு நடந்த, முதல் உலகக் கோப்பையை கைப்பற்றிய இந்திய ஆடவர் மற்றும் மகளிர் அணிகள், இந்த முறையும் உலக கோப்பையை கைப்பற்றியது.
லூதியானாவில் உள்ள குருநானக் தேவ் மைதானத்தில் ஆண்கள் பிரிவின் இறுதிப் போட்டி நடைபெற்றது. எல்லா லீக் போட்டிகளிலும் வெற்றிப் பெற்ற இந்திய அணியும், லீக் போட்டிகளில் இந்தியாவிடம் மட்டும் தோல்வியடைந்த கனடா அணியும், இறுதிப் போட்டியில் மோதின. இதில் இந்திய அணி 59-25 புள்ளிகள் வித்தியாசத்தில் கனடா அணியை எளிதாக வென்றது.
கடந்த ஆண்டு நடந்த உலகக் கோப்பை போட்டியில் 2ம் இடத்தை பிடித்திருந்த பாகிஸ்தான் அணி, இந்த ஆண்டு இத்தாலியை 60-22 புள்ளிக் கணக்கில் வெற்றிப் பெற்று 3ம் இடத்தை பெற்றது.
மகளிர் பிரிவில் இங்கிலாந்து, இந்தியா அணிகள் இறுதிப் போட்டியில் மோதின. இதில் 44-17 என்ற புள்ளிக் கணக்கில் இந்தியா, இங்கிலாந்து அணியை வெளியேற்றியது.
வெற்றி பெற்ற அணிக்கு கோப்பை மற்றும் ரூ.2 கோடிக்கான காசோலை பரிசளிக்கப்பட்டது. 2ம் இடத்தை பிடித்த அணிகளுக்கு ரூ.1 கோடிக்கான காசோலை வழங்கப்பட்டது.
கோப்பை மற்றும் பரிசுகளை வழங்கிய பஞ்சாப் மாநில முதல்வர் பிரகாஷ் சிங் பதால், வெற்றி பெற்ற இந்திய வீரர்களுக்கு அரசு பணி வழங்கப்படும் என்று அறிவித்தார். 20 நாட்களாக நடந்த வந்த உலகப் கோப்பை கபடிப் போட்டியின் இறுதி நிகழ்ச்சி சிறப்பாக நடந்தது.
இந்த நிகழ்ச்சியில் முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் செளத்ரி சுஜாத் ஹூசைன், இந்தி நடிகர் அக்ஷ்ய் குமார், நடிகை தீபிகா படுகோனே ஆகியோர் கலந்து கொண்டனர். முடிவில் வானவேடிக்கை நிகழ்ச்சியும் நடைபெற்றது.


Click it and Unblock the Notifications