டாக்கா: வங்கதேசத்தில் நடைபெற்ற மகளிர் கபடி உலகக் கோப்பையில் இந்திய அணி மீண்டும் சாம்பியன் பட்டம் வென்று வரலாறு படைத்துள்ளது. இறுதிப்போட்டியில் சீன தைபே அணியை வீழ்த்தி, தொடர்ந்து இரண்டாவது முறையாக உலகக் கோப்பையை உச்சி முகர்ந்துள்ளது இந்திய மகளிர் அணி. இந்தத் தொடர் முழுவதுமே தோல்வியையே சந்திக்காமல் வலம் வந்த இந்திய வீராங்கனைகள், இறுதிப்போட்டியிலும் தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்டினர்.
டாக்காவில் நேற்று நடைபெற்ற விறுவிறுப்பான இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் சீன தைபே அணிகள் மோதின. பலம் வாய்ந்த இரு அணிகளும் மோதியதால் ஆட்டத்தில் அனல் பறந்தது. இந்திய வீராங்கனைகளின் நேர்த்தியான ஆட்டத்திற்கு முன்னால் சீன தைபே அணியால் ஈடுகொடுக்க முடியவில்லை. ஆட்ட நேர முடிவில் 35-28 என்ற புள்ளிகள் கணக்கில் இந்திய அணி அபார வெற்றி பெற்று கோப்பையைக் கைப்பற்றியது. மொத்தம் 11 நாடுகள் பங்கேற்ற இந்த உலகக் கோப்பைத் தொடரில், இந்திய அணி தனது முழு பலத்தையும் நிரூபித்துள்ளது.

லீக் சுற்றுகளில் எதிரணிகளை துவம்சம் செய்தே இந்தியா முன்னேறியது. தாய்லாந்துக்கு எதிராக 65-20 என்ற கணக்கில் பிரம்மாண்ட வெற்றி பெற்றது. போட்டியை நடத்திய வங்கதேசத்தை 43-18 என வீழ்த்தியது. ஜெர்மனியை 63-22 என்ற புள்ளிகளில் பந்தாடியது. உகாண்டாவை 51-16 என எளிதாக வென்றது.
லீக் போட்டிகளில் பெற்ற உத்வேகத்துடன் அரையிறுதிக்குச் சென்ற இந்தியா, அங்கே பலம் வாய்ந்த ஈரான் அணியை 33-21 என்ற கணக்கில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. சீன தைபே அணி இறுதிப்போட்டியில் தோல்வியடைந்தாலும் இந்தத் தொடரில் சிறப்பாகவே செயல்பட்டது.
இறுதிப்போட்டிக்கு வரும்வரை அந்த அணியும் எந்தத் தோல்வியையும் சந்திக்கவில்லை. கென்யா, நேபாளம், ஈரான், தான்சானியா, போலந்து மற்றும் அரையிறுதியில் வங்கதேசம் ஆகிய அணிகளை வீழ்த்தியே இறுதிப்போட்டிக்கு வந்தது சீன தைபே. ஆனால் இறுதிப்போட்டியில் இந்தியாவிடம் வீழ்ந்து இரண்டாம் இடத்தைப் பிடித்தனர்.
இந்திய மகளிர் அணியின் இந்தச் சாதனையைக் கண்டு முன்னாள் வீரர்களும், பயிற்சியாளர்களும் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர். பிரதமர் நரேந்திர மோடி மகளிர் அணியை பாராட்டி பதிவிட்டு இருக்கிறார்.
இந்த உலகக்கோப்பை வெற்றி குறித்து ஹரியானா ஸ்டீலர்ஸ் அணியின் பயிற்சியாளர் மன்பிரீத் சிங் கூறுகையில், "பெண்கள் அணியின் இந்தச் செயல்பாடு ஒட்டுமொத்த தேசத்தையும் பெருமைப்படுத்தியுள்ளது. அவர்களின் தன்னம்பிக்கையும், கூட்டு முயற்சியும் அற்புதம். ஒரு முன்னாள் வீரராக இந்த நிலையை அடைவது எவ்வளவு கடினம் என்று எனக்குத் தெரியும்" என்று பாராட்டியுள்ளார்.
அதேபோல புனேரி பல்தான் பயிற்சியாளர் அஜய் தாக்கூர், "உலகக் கோப்பையை இந்தியா தக்கவைத்தது மிகவும் பெருமையான தருணம். கடந்த சில ஆண்டுகளில் மகளிர் கபடி எந்த அளவுக்கு வளர்ச்சி அடைந்துள்ளது என்பதை இது காட்டுகிறது," என்று மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.