இன்று நடக்கிறது கபடி உலக கோப்பை பைனல்.. ஈரானை வீழ்த்துமா இந்தியா? #Kabadiworldcup
அகமதாபாத்: உலக கோப்பை கபடி இறுதி போட்டியில் இன்று, இந்தியா-ஈரான் அணிகள் பலப் பரிட்சை நடத்த உள்ளன.
3வது உலக கோப்பை கபடி போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடந்து வருகிறது. 12 அணிகள் பங்கேற்றுள்ளன. நேற்றிரவு நடந்த அரை இறுதியில் நடப்பு சாம்பியன் இந்தியா, தாய்லாந்தை, தவிடு பொடியாக்கி வெற்றி பெற்றது.

ரைடு சென்று புள்ளி எடுப்பதிலும், எதிரணி வீரர்களை மடக்கி பிடிப்பதிலும் கச்சிதமாக செயல்பட்ட இந்திய வீரர்களிடம் தாய்லாந்து வீரர்களால் கொஞ்சமும் ஈடுகொடுக்க முடியவில்லை.
முதல் பாதியில் இந்தியா 36-8 என்று முன்னிலை பெற்றிருந்த நிலையில், இரண்டாவது பாதியிலும் இந்திய வீரர்கள் பின்னி பெடலெடுத்தனர். ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 73-20 என்ற புள்ளி கணக்கில் பிரமாண்ட வெற்றியை பெற்றது.
இதன்மூலம், தொடர்ந்து 3வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இந்திய அணி. ரைடு மூலம் மட்டும் இந்திய வீரர்கள் 42 புள்ளிகளை திரட்டினர்.
முன்னதாக நடந்த மற்றொரு அரைஇறுதியில் ஈரானும், தென்கொரியாவும் மோதின. லீக் சுற்றில் இந்தியாவையே தோற்கடித்த தென் கொரியா, ஈரானிடம் 28-22 என்ற புள்ளி கணக்கில் தோல்வியடைந்தது.
இன்று இரவு 9 மணிக்கு தொடங்கும் பைனலில் இந்தியாவும், ஈரானும் மோத உள்ளன. 2004, 2007ம் ஆண்டு இறுதிப்போட்டிகளிலும் இவ்விரு அணிகளே சந்தித்ததும், அதில் இந்தியா வெற்றி வாகை சூடியதும் நினைவிருக்கலாம். இதுவரை இந்தியா 7 முறை உலக கோப்பை பைனலில் வெற்றியை ருசித்துள்ளது. இப்போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ்2 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்ய உள்ளது.


Click it and Unblock the Notifications