டெல்லி: 2025 புரோ கபடி லீக் (PKL) தொடரின் வாழ்வா-சாவா ஆட்டமான மூன்றாவது எலிமினேட்டர் போட்டியில், தெலுங்கு டைட்டன்ஸ் அணி 46-39 என்ற புள்ளிக்கணக்கில் பாட்னா பைரேட்ஸ் அணியை வீழ்த்தி, இறுதிப் போட்டிக்கான தங்களது கனவைத் தக்க வைத்துக்கொண்டது. செவ்வாய்க்கிழமை இரவு தியாகராஜ் உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற இந்தப் போட்டியில், டைட்டன்ஸ் அணியின் கேப்டன் பாரத் ஹூடா 23 புள்ளிகளை வாரிக் குவித்து, தனி ஒருவனாக அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.
இந்த வெற்றியின் மூலம், புதன்கிழமை நடைபெறும் தகுதிச்சுற்று 2-ல் (Qualifier 2), தெலுங்கு டைட்டன்ஸ் அணி, பலம் வாய்ந்த புனேரி பல்தானை எதிர்கொள்கிறது. இப்போட்டியில் வெற்றி பெறும் அணி, இறுதிப் போட்டிக்கு முன்னேறும்.

மறுமுனையில், தோல்வியடைந்தாலும் பாட்னா பைரேட்ஸ் அணியின் இளம் ரைடர் அயன் லோச்சப் (Ayan Loachab), தனது சிறப்பான ஆட்டத்தால் அனைவரின் மனதையும் வென்றார். இந்தப் போட்டியில் 20 புள்ளிகளுக்கு மேல் குவித்ததன் மூலம், ஒரே சீசனில் ஆறு முறை 20+ புள்ளிகளைப் பெற்ற முதல் புரோ கபடி வீரர் என்ற வரலாற்றுச் சாதனையை அவர் படைத்தார். இந்தச் சீசனில் மொத்தம் 316 ரைடு புள்ளிகளுடன், பாட்னாவின் வெற்றிப் பயணத்திற்குக் முக்கியக் காரணமாகத் திகழ்ந்தார்.
பரபரப்பாகத் தொடங்கிய ஆட்டத்தின் ஆரம்ப நிமிடங்கள் பாட்னாவின் கட்டுப்பாட்டிலேயே இருந்தது. அயனின் சிறப்பான ரைடுகளால், ஆட்டம் தொடங்கிய ஆறாவது நிமிடத்திலேயே தெலுங்கு டைட்டன்ஸ் அணியை 'ஆல் அவுட்' ஆக்கியது பாட்னா. முதல் கால் மணி நேர முடிவில், 13-9 என்ற கணக்கில் பாட்னா முன்னிலை வகித்தது. தொடர்ந்து சிறப்பாக ஆடிய அயன், புரோ கபடி வரலாற்றில் ஒரே சீசனில் 300 ரைடு புள்ளிகளை எட்டிய 5-வது வீரர் என்ற பெருமையையும் பெற்றார்.
பாட்னாவின் ஆதிக்கத்தால் டைட்டன்ஸ் அணி தடுமாறினாலும், முதல் பாதியின் கடைசி நிமிடங்களில் ஆட்டம் தலைகீழாக மாறியது. சுபம் ஷிண்டேவின் சிறப்பான டேக்கிள் மூலம் அயனை வெளியேற்றிய டைட்டன்ஸ், தொடர்ந்து புள்ளிகளைச் சேர்த்து பாட்னா அணியை 'ஆல் அவுட்' ஆக்கியது. இதன் விளைவாக, முதல் பாதி முடிவில் 22-20 என்ற கணக்கில் தெலுங்கு டைட்டன்ஸ் அணி முன்னிலை பெற்றது.
இரண்டாம் பாதியில் ஆட்டம் முழுவதும் பாரத் ஹூடாவின் கட்டுப்பாட்டிற்குச் சென்றது. தனது 'சூப்பர் 10'-ஐ நிறைவு செய்த அவர், தொடர்ந்து புள்ளிகளை வேட்டையாடி, பாட்னா அணியை இரண்டாவது முறையாக 'ஆல் அவுட்' ஆக்கினார். இதனால், தெலுங்கு டைட்டன்ஸ் அணி 10 புள்ளிகள் முன்னிலை பெற்று, வெற்றியை நோக்கிச் சீராகப் பயணித்தது.
ஒருபுறம் பாரத் புள்ளிகளை வாரிக் குவிக்க, மறுமுனையில் பாட்னா அணிக்காக அயன் தனி ஒருவனாகப் போராடினார். தனது அபாரமான 'டப்கி' மூலம் இரண்டு புள்ளிகளைப் பெற்று, டைட்டன்ஸ் அணியை 'ஆல் அவுட்' ஆக்கி, புள்ளி வித்தியாசத்தைக் குறைத்தார். இதனால் கடைசி நிமிடங்களில் ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிக்கொண்டது.
ஆனால், பாட்னா பெற்ற ஒவ்வொரு புள்ளிக்கும், தெலுங்கு டைட்டன்ஸ் அணியிடம் ஒரு பதில் இருந்தது. ஆட்டத்தின் இறுதிக் கட்டத்தில், பாரத் ஹூடா ஒரு அற்புதமான 'சூப்பர் ரைடு' மூலம் மூன்று புள்ளிகளை அள்ளி, பாட்னாவின் வெற்றி நம்பிக்கைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
தொடர்ந்து 8 போட்டிகளில் வெற்றி பெற்று, ப்ளே-ஆஃப் வரை முன்னேறிய பாட்னா பைரேட்ஸ் அணியின் கனவுப் பயணம் இந்தத் தோல்வியுடன் முடிவுக்கு வந்தது. தெலுங்கு டைட்டன்ஸ் அணி, இறுதிப் போட்டிக்கு ஒரு அடி முன்னேறியுள்ளது. அடுத்து அந்த அணி புனேரி பல்தான் அணிக்கு எதிரான இரண்டாவது தகுதிச் சுற்றுப் போட்டியின் அக்டோபர் 29 அன்று மோத உள்ளது. அதில் வெல்லும் அணி இறுதிப் போட்டியில் டபாங் டெல்லி அணியை எதிர்கொள்ளும்.