டெல்லி: 2025 புரோ கபடி லீக் தொடரின் 'எலிமினேட்டர் 1' சுற்றில், பாட்னா பைரேட்ஸ் அணி 48-32 என்ற புள்ளி கணக்கில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் பாட்னா அணி 'எலிமினேட்டர் 2' சுற்றுக்கு முன்னேறியுள்ளது. டெல்லியில் உள்ள தியாகராஜ் உள்விளையாட்டு அரங்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இப்போட்டியில், பாட்னா அணியின் நட்சத்திர ரெய்டர் அயன் லோச்சப் 20 புள்ளிகளைப் பெற்று சாதனை படைத்தார்.
இதன் மூலம், புரோ கபடி வரலாற்றில் ஒரே சீசனில் ஐந்து முறை 20+ புள்ளிகளைப் பெற்ற பர்தீப் நர்வால் மற்றும் தேவாங்க் தலால் ஆகியோரின் சாதனையை அவர் சமன் செய்தார். அவருக்குப் பக்கபலமாகத் தடுப்பாட்டத்தில் கலக்கிய நவதீப், 'ஹை ஃபைவ்' (5 டேக்கிள் புள்ளிகள்) அடித்து அசத்தினார். பிங்க் பாந்தர்ஸ் அணிக்காக அலி சமதி 'சூப்பர் 10' எடுத்த போதிலும், அது அணியின் தோல்வியைத் தடுக்க உதவவில்லை.

ஆட்டம் தொடங்கியது முதலே பாட்னா பைரேட்ஸ் அணி தனது ஆதிக்கத்தை நிலைநாட்டியது. அயன் தனது முதல் ரெய்டிலேயே புள்ளி கணக்கைத் தொடங்க, அன்கித் ஜக்லானின் சிறப்பான டேக்கிள் பாட்னா அணிக்கு ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து அயன் இரண்டு புள்ளி ரெய்டு எடுக்க, ஆட்டம் தொடங்கிய ஐந்தே நிமிடங்களில் ஜெய்ப்பூர் அணியை முதல் முறையாக 'ஆல் அவுட்' ஆக்கியது பாட்னா.
தொடர்ந்து ஆதிக்கம் செலுத்திய பாட்னா, 14வது நிமிடத்தில் நவதீப்பின் அற்புதமான டேக்கிள் மூலம் ஜெய்ப்பூர் அணியை இரண்டாவது முறையாக 'ஆல் அவுட்' ஆக்கியது. முதல் பாதியின் இறுதி நேரத்தில், அயன் தனது 'சூப்பர் 10'-ஐ நிறைவு செய்ய, மிலன் தஹியா மூன்றாவது முறையாக ஜெய்ப்பூரை 'ஆல் அவுட்' ஆக்கினார். இதனால், முதல் பாதி முடிவில் பாட்னா பைரேட்ஸ் 30-13 என்ற வலுவான முன்னிலையுடன் ஆட்டத்தை தனதாக்கியது.
இரண்டாம் பாதியில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி மீண்டு வர கடுமையாகப் போராடியது. அலி சமதி ரெய்டுகளிலும், தீபன்ஷு காத்ரி மற்றும் ஆர்யன் குமார் ஆகியோர் தடுப்பாட்டத்திலும் சிறப்பாகச் செயல்பட்டு புள்ளி வித்தியாசத்தைக் குறைத்தனர்.
ஆனால், பாட்னா அணியின் நவதீப் முக்கியமான நேரத்தில் டேக்கிள் செய்து மீண்டும் முன்னிலையை இரட்டை இலக்கத்திற்கு உயர்த்தினார். மேலும், அவர் தனது 'ஹை ஃபைவ்' ஐயும் நிறைவு செய்து அணியின் வெற்றியை உறுதி செய்தார். கடைசி நிமிடங்களில், அயன் தனது அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி, ஒரு 'டூ-ஆர்-டை' ரெய்டில் இரண்டு புள்ளிகளைப் பெற்று அணியின் வெற்றியை உறுதி செய்தார்.
இந்தச் சீசனில் 275 ரெய்டு புள்ளிகளுடன், அதிக ரெய்டு புள்ளிகள் பெற்ற வீரர்கள் பட்டியலிலும் அயன் முதலிடத்தைப் பிடித்தார். இறுதியில், பாட்னா பைரேட்ஸ் நான்காவது முறையாக ஜெய்ப்பூரை 'ஆல் அவுட்' செய்து 48-32 என்ற கணக்கில் இமாலய வெற்றியைப் பதிவு செய்தது.
பாட்னா பைரேட்ஸ் அணி இன்று (அக்டோபர் 27, திங்கட்கிழமை) நடைபெறும் 'எலிமினேட்டர் 2' போட்டியில், தெலுங்கு டைட்டன்ஸை எதிர்கொள்ளும்.