சென்னை: புரோ கபடி லீக் சீசன் 10-இன் சாம்பியன் புனேரி பல்தான் அணி, தாங்கள் ஏன் சாம்பியன் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது. சென்னை எஸ்.டி.ஏ.டி அரங்கில் நடைபெற்ற போட்டியில், தொடக்கத்தில் பின்தங்கி தடுமாறினாலும், பின்னர் விஸ்வரூபம் எடுத்து, 37-27 என்ற புள்ளிக் கணக்கில் யு மும்பா அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இளம் ரெய்டர் ஆதித்யா ஷிண்டேவின் ஆல்-ரவுண்ட் ஆட்டம், புனேரி அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தது.
இந்த ஆட்டத்தின் தொடக்கத்தில் யு மும்பா அணி புயல் போல சீறியது. யு மும்பா ரெய்டர் அஜித் சௌஹான், ஒரு நம்ப முடியாத சூப்பர் ரெய்டை நிகழ்த்தினார். மூன்று முக்கிய வீரர்களை ஒரே ரெய்டில் வெளியேற்றி, புனேரி அணிக்கு மிகப்பெரிய அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார். அதனால், யு மும்பா அணி 4-0 என வலுவான முன்னிலையைப் பெற்றது.
இந்த அதிர்ச்சிதான், தூங்கிக்கொண்டிருந்த சாம்பியன் அணியைத் தட்டி எழுப்பியது. ஆதித்யா ஷிண்டே, தனது முதல் ரெய்டிலேயே புனேரி அணியின் கணக்கைத் தொடங்கினார். அதன் பிறகு, அவரது ஆட்டம் வேறு ஒரு தளத்திற்குச் சென்றது. எதிரணி வீரர்களை அடுத்தடுத்து வெளியேற்றி, ஸ்கோரை 5-5 என சமன் செய்தார். இருப்பினும், யு மும்பா அணியின் ரெய்டர்கள் தொடர்ந்து புள்ளிகளைக் குவிக்க, முதல் கால் பகுதி முடிவில் யு மும்பா முன்னிலையில் இருந்தது.

இரண்டாம் கால் பகுதியில், புனேரி பல்தான் அணி தனது உண்மையான முகத்தைக் காட்டியது. அஸ்லாம் மற்றும் பங்கஜ் மோஹிதே ஜோடி, கூர்மையான ரெய்டுகளால் யு மும்பா அணியை கலங்கடித்தனர். இதன் விளைவாக, போட்டியின் முதல் 'ஆல்-அவுட்'-ஐ நிகழ்த்தி, ஆட்டத்தின் போக்கையே புனேரி பல்தான் தலைகீழாக மாற்றியது. தொடக்கத்தில் பின்தங்கியிருந்த புனேரி அணி, முதல் பாதி முடிவில் 17-12 என வலுவான முன்னிலையுடன் ஓய்வறைக்குச் சென்றது.
இரண்டாம் பாதியில் ஆட்டம் ஒரு 'த்ரில்லர்' திரைப்படம் போல நகர்ந்தது. யு மும்பாவின் ஒவ்வொரு தாக்குதலுக்கும் புனேரி அணியின் ஆதித்யா ஷிண்டே பதிலடி கொடுத்தார். ரெய்டுக்கு ரெய்டு, டேக்கிளுக்கு டேக்கிள் என இரு அணிகளும் சம பலத்துடன் மோதின.
புள்ளி சமன் ஆனபோது, அந்த நொடியில், ஆதித்யா ஷிண்டே ஒரு மிரட்டலான சூப்பர் டேக்கிள் செய்து, புனேரி அணிக்கு மீண்டும் முன்னிலையைப் பெற்றுத் தந்தார். இதுவே போட்டியின் திருப்புமுனையாக அமைந்தது. அந்தத் தருணத்தைப் பயன்படுத்திக்கொண்ட புனேரி அணி, ஆட்டத்தை முழுவதுமாகத் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தது.
ஆதித்யா ஷிண்டே தனது 'சூப்பர் 10'-ஐ நிறைவு செய்ததோடு, புரோ கபடி லீக்கில் தனது 100-வது புள்ளியையும் பதிவு செய்து சாதனை படைத்தார். போட்டியின் இறுதி நொடியில், யு மும்பா அணியை 'ஆல்-அவுட்' ஆக்கிய ஆதித்யா ஷிண்டே, புனேரி பல்தான் அணிக்கு 10 புள்ளிகள் வித்தியாசத்தில் ஒரு மறக்க முடியாத வெற்றியை உறுதி செய்தார். இந்த ஆட்டத்தில் 14 புள்ளிகளைப் பெற்ற ஆதித்யா ஷிண்டே, புனேரி அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்தார்.