ஐதராபாத் : புரோ கபடி லீக் தொடரில் நடப்புச சாம்பியன் புனே அணியை தமிழ் தலைவாஸ் அணி வீழ்த்தி தொடர்ந்து இரண்டாவது வெற்றியை பதிவு செய்திருக்கிறது. ஐதராபாத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி தங்களுடைய இரண்டாவது லீக் ஆட்டத்தில் களமிறங்கியது.
யாருமே எதிர்பாராத வகையில் இந்த போட்டியில் தமிழ் தலைவாஸ் அணியை ஆக்ரோசமாக விளையாடியது. போட்டியில் ஒரு பகுதியில் கூட தமிழ் தலைவாஸ் அணி புள்ளிகளில் புனேவை விட பின் தங்கவில்லை. ஆரம்பத்தில் இருந்து இறுதி வரை தமிழ் தலைவாஸ் அணியே முன்னிலை பெற்று இருந்தது.

குறிப்பாக தமிழ் தலைவாஸ் அணியில் இடம் பெற்றிருந்த நரேந்தர் மற்றும் சச்சின் ஆகியோர் அபாரமாக விளையாடி புள்ளிகளை குவித்தனர். போட்டியில் தொடக்கத்தில் இருந்தே தமிழ் தலைவாஸ் அணி வீரர்கள் ரைடு மூலமும் எதிரணி வீரர்களை டேக்கல் செய்வதன் மூலமும் புள்ளிகளை பெற்றனர். ஒரு கட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி ஆறுக்கு இரண்டு என்ற கணக்கில் முன்னிலை பெற்றபோது, புனே அணி சூப்பர் டேக்கல் செய்து நான்கு புள்ளிகளை பெற்றனர்.
இதன் மூலம் இரு அணிகளுக்கும் இடையிலான புள்ளிகள் வித்தியாசம் ஒன்றாக மாறியது. எனினும் சுதாரித்துக் கொண்டு விளையாடிய தமிழ் தலைவாஸ் தொடர்ந்து அடுத்தடுத்து புள்ளிகளை பெற்றனர். ஒரு கட்டத்தில் தமிழ் தலைவாஸ் புனேவை ஆல் அவுட் செய்தது. இரண்டு கோடி ரூபாய்க்கு மேல் எடுக்கப்பட்ட சச்சின் தமிழ் தலைவாஸ்க்கு அடுத்தடுத்து புள்ளிகளை பெற்றுக் கொடுத்தார்.
இதன் மூலம் முதல் பகுதியில் தமிழ் தலைவாஸ் அணி 19க்கு 15 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது. இதேபோன்று ஆட்டத்தின் இரண்டாவது பகுதியிலும் தமிழ் தலைவாஸ் அணியே ஆதிக்கம் செலுத்தியது. ஒரு கட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி 11 புள்ளிகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருக்க புனே அணி கடைசி கட்டத்தில் வெற்றிக்காக கடுமையாக போராடியது.
எனினும் புனே அணியால் தோல்வியின் வித்தியாசத்தை மட்டுமே குறைக்க முடிந்ததை தவிர வெற்றி பெற முடியவில்லை. இதனால் தமிழ் தலைவாஸ் 35க்கு 30 என்ற புள்ளிகள் கணக்கில் 5 புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றியை பெற்றது.தமிழ் தலைவாஸ் வீரர்கள் நரேந்தர் 9 புள்ளிகளும், சச்சின் 8 புள்ளிகளும் பெற்று வெற்றிக்கு காரணமாக இருந்தனர். இதன் மூலம் தமிழ் தலைவா சனி 10 புள்ளிகள் பெற்று தற்போது நான்காவது இடத்தில் இருக்கின்றது.