ஐதராபாத்: புரோ கபடி லீக் தொடரில் ஜெய்ப்பூர் பிங்க் பேந்தர்ஸ் அணிக்கு எதிரான போட்டியை 30-30 என்ற புள்ளிகள் கணக்கில் தமிழ் தலைவாஸ் அணி கடைசி நொடியில் டிரா செய்தது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
11வது சீசனுக்கான புரோ கபடி லீக் தொடரி 2வது வார ஆட்டத்தில் ஜெய்ப்பூர் பிங்க் பேந்தர்ஸ் அணியை எதிர்த்து தமிழ் தலைவாஸ் அணி களமிறங்கியது. இந்த தொடரின் முதல் 2 போட்டிகளில் தமிழ் தலைவாஸ் அணி அபார வெற்றியை பெற்ற நிலையில், 3வது போட்டியில் பாட்னா பைரேட்ஸ் அணியுடனான போட்டியில் 2 புள்ளிகள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.

இந்த நிலையில் தமிழ் தலைவாஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஜெய்ப்பூர் பிங்க் பேந்தர்ஸ்அணி தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தியது. முதல் பாதியின் முடிவில் ஜெய்ப்பூர் பிங்க் பேந்தர்ஸ் அணி 21-16 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. முதல் 10 நிமிடங்களுக்குள் தமிழ் தலைவாஸ் அணி ஆல் அவுட் செய்யப்பட்டதால், புள்ளிகள் கணக்கில் வித்தியாசம் பெரிதாக இருந்தது.
இருந்தாலும் இரண்டாம் பாதி ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி கொஞ்சம் கொஞ்சமாக ஆட்டத்திற்குள் வந்தது. ஆட்டம் முடிவதற்கு 10 நிமிடங்கள் முடிவதற்கு முன் 25-21 என்ற கணக்கில் ஜெய்ப்பூர் அணி முன்னிலையை தொடர்ந்தது. பின்னர் ஆட்டத்தின் கடைசி இரண்டரை நிமிடங்களில் ஆட்டம் 29-26 என்று 3 புள்ளிகள் மட்டுமே தமிழ் தலைவாஸ் அணி பின் தங்கியிருந்தது.
ஜெய்ப்பூர் பிங்க் பேந்தர்ஸ் அணியை ஆல் அவுட் செய்யும் வாய்ப்பு இருந்ததால், ஆட்டத்தில் உச்சக்கட்ட பரபரப்பு ஏற்பட்டது. கடைசி 30 நொடியில் ஜெய்ப்பூர் அணி வீரர் ரெய்டுக்கு வந்து நேரத்தை கடந்த முயற்சித்தார். ஆனால் அவர் பால்க் லைனை தொடவில்லை என்றால், மீண்டும் தமிழ் தலைவாஸ் அணிக்கு ரெய்டு செல்வதற்கு வாய்ப்பு வழங்கப்படும்.
இந்த நிலையில் ஜெய்ப்பூர் அணி வீரரை தமிழ் தலைவாஸ் அணி டேக்குள் செய்து அசத்தியது. இதனால் ஆட்டம் 30-30 என்ற புள்ளிகள் கணக்கில் டிராவில் முடிவடைந்தது. கடைசி நேரத்தில் தமிழ் தலைவாஸ் அணியின் நட்சத்திர வீரர் சச்சின் அபாரமாக செயல்பட்டு அசத்தினார். தமிழ் தலைவாஸ் அணிக்கு தோல்வி நிச்சயம் என்று பார்க்கப்பட்ட போது, அசத்தலாக விளையாடி டிராவில் முடித்தது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக தமிழ் தலைவாஸ் அணி புள்ளிப் பட்டியலில் 2வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.