Pro kabaddi league 2019: பெங்கால் வாரியர்சை வாரிய அரியானா..! பரபரப்பான ஆட்டத்தில் த்ரில் வெற்றி
டெல்லி:புரோ கபடி லீக் தொடரில் அரியானா ஸ்டீலர்ஸ் அணி, பெங்கால் வாரியர்சை பரபரப்பான கட்டத்தில் வீழ்த்தியது.
12 அணிகள் பங்கேற்றுள்ள 7வது புரோ கபடி லீக் தொடர் ஜூலை 20ம் தேதி ஐதராபாத்தில் தொடங்கியது. இதில் பங்கேற்றுள்ள ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும்.
லீக் சுற்று (அதாவது 132 ஆட்டங்கள்) முடிவில் புள்ளி பட்டியலில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் நேரடியாக அரையிறுதிக்கு தகுதி பெறும். 3 முதல் 6 வரையிலான இடங்களை பெறும் அணிகள் வெளியேற்றுதல் சுற்று ஆட்டத்தில் மோத வேண்டும். அதில் வெற்றி பெறும் 2 அணிகள் அரையிறுதிக்கு செல்லும்.

ரசிகர்கள் ஆர்வம்
அதன்படி, போட்டிகள் முக்கிய கட்டத்தை எட்டியுள்ளன. டெல்லியில் நேற்று 60வது லீக் ஆட்டம் நடைபெற்றது. அதில் பெங்கால் வாரியர்சும், அரியானா ஸ்டீலர்ஸ் அணியும் மோதின. இரு அணிகளும் பலம் வாய்ந்தவை என்பதால் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு எழுந்தது.

தொடக்கத்தில் முன்னிலை
ஆட்டம் தொடங்கியது. முதல் பாதியில் பெங்கால் வாரியர்ஸ் அணி, அரியானா ஸ்டீலர்சை ஆல் அவுட்டாக்கி அதிர வைத்தது. ஆனாலும், அரியானா சரிவில் இருந்து மீண்டு வந்து முன்னிலை பெற்றது. தமது ஆட்டத்தில் சுதாரிப்பும், சாதுர்யத்தையும் தக்க வைத்துக் கொண்டு விளையாடியது அரியானா.

6வது வெற்றி
அந்த முன்னிலையை கடைசி வரை தக்கவைத்துக்கொண்டது. முடிவில் அரியானா ஸ்டீலர்ஸ் அணி 36க்கு 33 என்ற புள்ளி கணக்கில் பெங்கால் வாரியர்சை வீழ்த்தியது. இதுவரை மொத்தம் 10 ஆட்டங்களில் அரியானா விளையாடி இருக்கிறது. இது 6வது வெற்றியாகும்.

தோல்வி நம்பர் 3
அரியானா அணி 4 ஆட்டங்களில் தோல்வியை சந்தித்திருக்கிறது. பெங்கால் வாரியர்சுக்கும் இது 10வது ஆட்டமாகும். இந்த ஆட்டத்தில் ஆடிய பெங்கால் வாரியர்ஸ் அணி சந்தித்த 3வது தோல்வி இதுவாகும்.

ஆதிக்கம்
மற்றொரு ஆட்டத்தில் உ.பி.யோத்தா, புனேரி பல்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தியது உ.பி.யோத்தா. ஆனாலும், விடாத புனேரி பல்தான், கடைசி கட்டத்தில் நெருக்கடி கொடுத்தது. ஆனால் அது வெற்றியாக மாறவில்லை.

புனேரி பல்தான் தோல்வி
முடிவில் உ.பி.யோத்தா அணி 35க்கு 30 என்ற நெருக்கடியான புள்ளி கணக்கில் புனேரி பல்தானை வீழ்த்தியது. 11வது ஆட்டத்தில் ஆடிய உ.பி.யோத்தா அணி பெற்ற 4வது வெற்றி இது. 10வது ஆட்டத்தில் ஆடிய புனேரி பல்தான் 6வது தோல்வியை சந்தித்தது.


Click it and Unblock the Notifications