நொய்டா : 10வது சீசன் புரோ கபடி லீக் தொடரின் லீக் சுற்றில் குஜராத் ஜெயன்ட்ஸ் - டபாங் டெல்லி அணிகள் மோதின. இந்தப் போட்டியில் டபாங் டெல்லி அணி 35 - 28 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்றது.
டபாங் டெல்லி அணியின் ஆஷு மாலிக் தனது அதிரடி ரெய்டுகளால் இரண்டாம் பாதியில் போட்டியை மாற்றி தன் அணிக்கு வெற்றி தேடித் தந்தார். அவருக்கு ரெய்டர் மன்ஜீத் மற்றும் தடுப்பாட்டத்தில் யோகேஷ், ஆஷிஷ் ஒத்துழைப்பு அளித்து ஆடினர்.

இந்தப் போட்டியில் முதல் பாதியில் குஜராத் ஜெயன்ட்ஸ் அணியே முன்னிலையில் இருந்தது. முதல் பாதியின் முடிவில் 16 - 14 என்ற அளவில் டபாங் டெல்லி அணி பின்தங்கி இருந்தது. பின்னர் இரண்டாம் பாதியில் ஆஷு மாலிக் சென்ற தொடர் ரெய்டுகள் குஜராத் அணியை நிலைகுலைய வைத்தது.
பின்னர் ஆட்ட நேர முடிவில் டபாங் டெல்லி அணி 35 - 28 என்ற புள்ளிக் கணக்கில் போட்டியில் வென்றது. இந்த வெற்றியால் புள்ளிப் பட்டியலில் கீழே இருந்து உயர்ந்து மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது டபாங் டெல்லி. குஜராத் ஜெயன்ட்ஸ் தோல்வி அடைந்தாலும் அணி தற்போது தனது இரண்டாம் இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது.
தமிழ் தலைவாஸ் அணி புள்ளிப் பட்டியலில் 11வது இடத்தில் தான் உள்ளது. அந்த அணி இதுவரை 9 போட்டிகளில் ஆடி இருக்கிறது, அதில் வெறும் இரண்டு வெற்றிகள் மட்டுமே பெற்று பாதாளத்தில் உள்ளது தமிழ் தலைவாஸ் நிலைமை.