மும்பை : புரோ கபடி லீக் தொடரின் பத்தாவது சீசன் தொடங்கியது. அதன் முதல் போட்டியில் நட்சத்திர வீரர்களை கொண்ட குஜராத் ஜெயன்ட்ஸ் - தெலுகு டைட்டன்ஸ் அணிகள் மோதின.
தெலுகு டைட்டன்ஸ் அணியில் புள்ளிகளை அள்ளும் அதிரடி வீரர் பவன் ஷெராவத் இருந்ததால் அந்த அணியே வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், குஜராத் ஜெயன்ட்ஸ் அணியின் சோனு அதிரடியாக 11 புள்ளிகளை எடுத்து தெலுகு அணியை வீழ்த்த காரணமாக இருந்தார்.
இந்தப் போட்டியில் குஜராத் ஜெயன்ட்ஸ் அணி இரண்டு முறை, தெலுகு டைட்டன்ஸ் அணியை ஆல் - அவுட் செய்தது. அதே சமயம், தெலுகு அணியால், குஜராத் அணியை ஒருமுறை கூட ஆல் - அவுட் செய்ய முடியவில்லை.

இந்தப் போட்டியில் ஒரு சுவாரசியமான திருப்பம் நடந்தது. முதல் பாதியின் முடிவில் தெலுகு டைட்டன்ஸ் அணி 16 - 13 என்ற புள்ளிக் கணக்கில் முன்னிலையில் இருந்தது. ஆனால், இரண்டாவது பாதி தொடங்கிய உடன் சோனு ஒரே ரெய்டில் ஐந்து புள்ளிகளை அள்ளினார். அதுவே போட்டியின் திருப்புமுனை ஆகும். அப்போது மரண அடி வாங்கிய தெலுகு அணி அதன் பின் முன்னிலை பெறவே இல்லை.
அதன் பின் இரண்டாம் பாதியிலேயே இரண்டு முறை தெலுகு அணியை ஆல் - அவுட் செய்தது குஜராத் அணி. ஆட்ட நேர முடிவில் 38 - 32 என்ற புள்ளிக் கணக்கில் குஜராத் ஜெயன்ட்ஸ் அணி இந்த சீசனின் முதல் வெற்றியை பதிவு செய்தது.