ஜெய்ப்பூர் : பத்தாவது சீசன் புரோ கபடி லீக் தொடரில் தெலுகு டைட்டன்ஸ் - பெங்களுரு புல்ஸ் அணிகளுக்கு இடையேயான லீக் போட்டி நடைபெற்றது. இந்த தொடரில் இதுவரை ஒரு வெற்றி மட்டுமே பெற்று இருந்த தெலுகு டைட்டன்ஸ் இந்தப் போட்டியில் முதல் பாதியில் முன்னிலை பெற்றது.
எப்படியும் போட்டியில் ஜெயித்துவிடும் என தெலுகு டைட்டன்ஸ் ரசிகர்கள் எண்ணிய நிலையில், "அது எப்படி ஜெயிப்போம்?" என சவால் விட்டு இரண்டாம் பாதியில் படுமோசமாக ஆடி தோல்வி அடைந்தது தெலுகு டைட்டன்ஸ். கடந்த போட்டிகளில் சரியான வாய்ப்பு கிடைக்காமல் அல்லாடிய தமிழகத்தை சேர்ந்த சஞ்சீவிக்கு இந்த முறை 7 ரெய்டுகள் செல்லும் வாய்ப்பை வழங்கியது தெலுகு டைட்டன்ஸ் அணி. ஆனால், அவர் அதில் இரண்டு ரெய்டில் சிக்கினார். மற்ற ஐந்து ரெய்டுகளில் புள்ளிகள் பெறவில்லை. அவரது சொதப்பலான ஆட்டமும் தெலுகு அணியின் தோல்விக்கு ஒரு வகையில் காரணமாக அமைந்தது.

இந்தப் போட்டியில் முதல் பாதியில் பவன் செஹ்ராவத் சிறப்பாக ரெய்டுகள் சென்று புள்ளிகளை பெற்றதால் 12 - 9 என்ற அளவில் முன்னிலை பெற்றது தெலுகு அணி. ஆனால், இரண்டாம் பாதியில் பெங்களுரு அணியின் விகாஷ் ஒரே ரெய்டில் ஆறு புள்ளிகள் எடுத்து போட்டியை தலைகீழாக மாற்றினார். அதன் பின் துவண்டு போக தெலுகு டைட்டன்ஸ் அணி 26 - 42 என்ற புள்ளிக் கணக்கில் பெங்களுரு அணியிடம் தோல்வி அடைந்தது.
மற்றொரு லீக் போட்டியில் பாட்னா பைரேட்ஸ் - யுபி யுத்தாஸ் அணிகள் மோதின. புள்ளிப் பட்டியலில் 11வது இடத்தில் இருக்கும் யுபி யுத்தாஸ் இந்தப் போட்டியில் ஜெயித்தே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் ஆடியது. ஆனால், 34 - 31 என்ற புள்ளிக் கணக்கில் பாட்னா பைரேட்ஸ் அணியிடம் தோல்வி அடைந்தது யுபி அணி.