சென்னை : 2024 புரோ கபடி லீக் தொடரில் தமிழ் தலைவாஸ் அணி கடந்த மூன்று போட்டிகளில் இரண்டில் வெற்றி பெற்று சற்று நம்பிக்கையுடன் காட்சி அளிக்கிறது. ஆனால், அந்த அணி இந்த சீசனில் பிளே ஆஃப் செல்வது மிகவும் கடினம் என்றே கூறப்படுகிறது.
இதுவரை 13 போட்டிகளில் ஆடி உள்ள தமிழ் தலைவாஸ் அணி அதில் நான்கு வெற்றிகளை மட்டுமே பெற்றுள்ளது. தனது முதல் பத்து போட்டிகளில் 8 தோல்விகளை சந்தித்ததே இந்த மோசமான நிலைக்கு காரணம். தற்போது 13 போட்டிகளில் ஆடி 25 புள்ளிகள் பெற்று புள்ளிப் பட்டியலில் பத்தாவது இடத்தில் உள்ளது.

மொத்தம் 12 அணிகள் பங்கேற்றுள்ள இந்த தொடரில் தமிழ் தலைவாஸ் அணி 60 சதவீத லீக் போட்டிகளின் முடிவில் பத்தாவது இடத்தில் இருப்பது என்பது அதன் பிளே ஆஃப் வாய்ப்பை மிக மிக கடினமானதாக மாற்றி உள்ளது. இன்னும் 9 போட்டிகள் மீதமுள்ள நிலையில், அந்த போட்டிகள் அனைத்திலும் வென்றால் கூடுதலாக 45 புள்ளிகள் பெற்று மொத்தம் 70 புள்ளிகளுடன் பிளே ஆஃப் செல்ல வாய்ப்பு கிடைக்கலாம். ஆனால், 9 போட்டிகளிலும் வெற்றி பெறுவது என்பது நடக்காத காரியம் என கருதப்படுகிறது.
இதுவரை தடுப்பாட்டத்தில் சொதப்பி வந்த தமிழ் தலைவாஸ் இப்போது தான் அதில் சற்று முன்னேறி உள்ளது. இந்த நிலையில், ஒன்பது போட்டிகளில் தொடர்ந்து வெல்வது என்பது தற்போதுள்ள தமிழ் தலைவாஸ் அணியால் சாத்தியமில்லாத ஒன்றாக பார்க்கப்படுகிறது.
தற்போது புள்ளிப் பட்டியலில் முதல் பத்து இடங்களில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் (58 புள்ளிகள்), புனேரி பல்தான்ஸ் (52 புள்ளிகள்), டபாங் டெல்லி (44 புள்ளிகள்), குஜராத் டைட்டன்ஸ் (44 புள்ளிகள்), ஹரியானா ஸ்டீலர்ஸ் (39 புள்ளிகள்), பெங்கால் வாரியர்ஸ் (38 புள்ளிகள்), யு மும்பா (36 புள்ளிகள்), பாட்னா பைரேட்ஸ் (32 புள்ளிகள்), பெங்களுரு புல்ஸ் (32 புள்ளிகள்), தமிழ் தலைவாஸ் (25 புள்ளிகள்) உள்ளன. கடைசி இரண்டு இடங்களில் யுபி யுத்தாஸ் (22 புள்ளிகள்), தெலுகு டைட்டன்ஸ் (10 புள்ளிகள்) உள்ளன.