ஹைதராபாத் : பத்தாவது சீசன் புரோ கபடி தொடரின் லீக் சுற்றில் புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கும் தெலுகு டைட்டன்ஸ் அணியும், முதல் இடத்தில் இருக்கும் புனேரி பல்தான் அணியும் மோதின. எப்படியும் புனேரி அணிதான் வெற்றி பெறும் என போட்டிக்கு முன்பே அனைவருக்கும் தெரிந்தாலும், தெலுகு அணி குறைந்தபட்சம் வெற்றிக்கு அருகிலாவது வருகிறதா? என பார்ப்போம் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

ஆனால், தெலுகு அணி முதல் பாதியில் பெரும் அதிர்ச்சியை அளித்தது. முதல் பாதி முடிவில் புனேரி அணி 29 - 6 என்ற அளவில் 23 புள்ளிகள் முன்னிலை பெற்று இமாலய வெற்றியை நோக்கி சென்றது புனேரி அணி. முதல் பாதியிலேயே 23 புள்ளிகள் முன்னிலை பெற்றால், ஆட்ட முடிவில் 50 - 60 புள்ளிகள் வரைக் கூட புனேரி அணி முன்னிலை பெறலாம் என்ற நிலை இருந்தது. அப்படி நடந்தா; ஏற்கனவே தோல்விகளை மட்டுமே சந்தித்து வரும் தெலுகு அணிக்கு பெரும் அவமானமாகி விடும்.
இந்த நிலையில் தெலுகு அணியின் ஒரே நம்பிக்கையான ரெய்டர் பவன் செஹ்ராவத் மோசமாக சொதப்பிக் கொண்டு இருந்தார். அவர் 13 ரெய்டுகளில் 4 புள்ளிகள் மட்டுமே பெற்றார். அதே சமயம், தமிழக வீரர் சஞ்சீவி தன் தெலுகு அணிக்காக இரண்டாம் பாதியில் சில ஆறுதல் ரெய்டுகளை செய்தார்.
சஞ்சீவி ஒரு சூப்பர் ரெய்டு சென்று மூன்று புள்ளிகளை அள்ளினார். தெலுகு அணியில் அதிகபட்சமாக சஞ்சீவி 8 புள்ளிகள் எடுத்தார். இதை அடுத்து ஆட்ட நேர முடிவில் கவுரவமாக 29 புள்ளிகளை எடுத்தது தெலுகு டைட்டன்ஸ். புனேரி பல்தான் 60 - 29 என்ற அளவில் வெற்றி பெற்றது.