சென்னை : பத்தாவது சீசன் புரோ கபடி லீக் தொடரில் தமிழ் தலைவாஸ் அணி மாட்டுப் பொங்கல் முதல் வெற்றிப் பாதைக்கு திரும்பிய நிலையில், தெலுகு டைட்டன்ஸ் அணியை புரட்டி எடுத்தது. போன் வாரம் வரை தமிழ் தலைவாஸ் ஒரு போட்டியில் வெற்றி பெற்றால் அதிசயம் என்ற நிலை இருந்தது.
ஆனால், இப்போது 25 புள்ளிகள் வித்தியாசத்தில் தெலுகு டைட்டன்ஸ் அணியை கதறவிட்டு அடித்தது. தடுப்பாட்டம் சிறப்பாக இருந்த நிலையில், ரெய்டுகளில் இன்னும் கூடுதலாக அனல் பறந்தது. கடந்த போட்டியில் பெங்களுரு புல்ஸ் அணியை 17 புள்ளிகள் வித்தியாசத்தில் வீழ்த்திய தமிழ் தலைவாஸ் அணி இந்த முறை இன்னும் ஒருபடி மேலே போய் 25 புள்ளிகள் வித்தியாசத்தில் தெலுகு அணியை புரட்டி எடுத்தது.

இந்தப் போட்டியில் தமிழ் தலைவாஸ் அணியின் நட்சத்திர ரெய்டர் நரேந்தர் 10 புள்ளிகளும், மற்றொரு முக்கிய ரெய்டர் அஜின்க்யா பவார் 11 புள்ளிகளும் அள்ளினர். தடுப்பாட்டத்தில் ஹிமான்ஷு 7 புள்ளிகளும், சாகர் 8 புள்ளிகளும் எடுத்தனர். தமிழகத்தை சேர்ந்த அபிஷேக் சற்று ஏமாற்றம் அளித்தார் அவர் தடுப்பாட்டத்தில் 3 புள்ளிகள் மட்டுமே எடுத்தார்.
தெலுகு டைட்டன்ஸ் அணியின் கேப்டன் பவன் செஹ்ராவத் எப்போதும் போல 10 புள்ளிகள் எடுத்தார். ஆனால், அவரது அணி மண்ணைக் கவ்வியது. ஆட்ட நேர முடிவில் தெலுகு அணி 29 புள்ளிகளும், தமிழ் தலைவாஸ் அணி 54 புள்ளிகளும் பெற்றன. 25 புள்ளிகள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியைப் பெற்ற தமிழ் தலைவாஸ் புள்ளிப் பட்டியலில் 35 புள்ளிகளை பெற்று அதே பத்தாவது இடத்தில் நீடிக்கிறது.
ஆனால், இனி வரும் போட்டிகளில் பெறும் வெற்றிகள் மூலம் அந்த அணி வேகமாக புள்ளிப் பட்டியலில் முன்னேறும். தற்போது ஆறாவது முதல் ஒன்பதாவது இடம் வரை உள்ள அணிகளுக்கும், தமிழ் தலைவாஸ் அணிக்குமான புள்ளி வித்தியாசம் வெகுவாக குறைந்துள்ளது. இந்த பெரிய வெற்றி மூலம் தமிழ் தலைவாஸ் அணி முதல் ஆறு இடங்களை பெற்று தமிழ் தலைவாஸ் பிளே-ஆஃப் செல்லுமா என்ற எதிர்பார்ப்பு எகிறி உள்ளது.