புரோ கபடி லீக் சீசன் 6.... 422 வீரர்கள் ஏலத்தில் பங்கேற்பு... யார் எந்த அணிக்கு போகிறார்கள்!
மும்பை: ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டி சீசன் 11 முடிந்து விட்டது. அதற்கடுத்து விளையாட்டு ரசிகர்களுக்கு விருந்து வைக்க வருகிறது, புரோ கபடி லீக் 6வது சீசன். இதற்கான வீரர்களை தேர்வு செய்யும் ஏலம் மும்பையில் இன்றும், நாளையும் நடக்கிறது. இதில் 422 வீரர்கள் பங்கேற்கின்றனர்.
கிரிக்கெட்டுக்கு ஐபிஎல் போட, கபடியை ஊக்குவிக்க புரோ கபடி லீக் போட்டிகள் நடக்கின்றன. இதுவரை 5 சீசன்கள் முடிந்துள்ளன. 5வது சீசனில் தொடர்ந்து மூன்றாவது முறையாக பட்னா பைரேட்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.

புரோ கபடி லீக் 6வது சீசன் இந்தாண்டு அக்டோபர் 19ல் துவங்குகிறது. மொத்தம் 12 அணிகள் பங்கேற்கின்றன. இதற்கான வீரர்களை தேர்வு செய்வதற்கான ஏலம் மும்பையில் இன்றும் நாளையும் நடக்கிறது.
5வது சீசனில் விளையாடிய வீரர்களில், 9 அணிகள் 21 பேரை தக்க வைத்துள்ளன. முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் உரிமையாளராக உள்ள தமிழ் தலைவாஸ் அணி, கேப்டன் அஜய் தாக்குர், அமித் ஹூடா, சி அருண் ஆகிய மூன்று வீரர்களை தக்க வைத்துள்ளது.
இந்த ஆண்டுக்கான ஏலத்தில் 422 வீரர்கள் பங்கேற்க உள்ளனர். இதில், ஈரான், வங்கதேசம், ஜப்பான், கென்யா, தென் கொரியா, மலேசியா, இலங்கை உள்பட 14 நாடுகளைச் சேர்ந்த 58 வீரர்களும் அடங்குவர். இதைத் தவிர, எதிர்கால கபடி ஹீரோக்கள் திட்டத்தில் பயிற்சி பெற்ற 87 வீரர்களும் பங்கேற்கின்றனர்.


Click it and Unblock the Notifications