புனே: புரோ கபடி லீக் தொடரில் யு-மும்பா அணிக்கு எதிரான ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி 47-31 என்ற கணக்கில் தோல்வியை சந்தித்துள்ளது. இதனால் புள்ளிப் பட்டியலில் 9வது இடத்தில் உள்ளதோடு, பிளே ஆஃப் சுற்றுக்கு செல்வதற்கான வாய்ப்பு மிகவும் குறைவாக மாறியுள்ளது. எஞ்சியுள்ள 5 போட்டிகளில் வென்றாலும், மற்ற அணிகளின் வெற்றி தோல்வி அடிப்படையில் மட்டுமே பிளே ஆஃப் செல்ல முடியும்.
11வது சீசனுக்கான புரோ கபடி லீக் தொடரின் 106வது போட்டியில் யு மும்பா அணியை எதிர்த்து தமிழ் தலைவாஸ் அணி களமிறங்கியது. தமிழ் தலைவாஸ் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதற்கு இந்தப் போட்டியில் வெல்வது மிக முக்கியம் என்பதால் ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டது. ஆனால் அந்த எதிர்பார்ப்புக்கு ஆப்பு வைக்கும் வகையில் தமிழ் தலைவாஸ் அணி முதல் 5 நிமிடத்தில் ஆல் அவுட்டானது.

இதன் காரணமாக முதல் 5 நிமிடங்களிலேயே யு மும்பா அணி 9-0 என்ற புள்ளிகள் கணக்கில் முன்னிலை பெற்றது. இருந்தாலும் அடுத்தடுத்து 5 புள்ளிகளை பெற்று தமிழ் தலைவாஸ் அணி கம்பேக் கொடுத்தது. தொடர்ந்து சிறப்பாக ஆடிய தமிழ் தலைவாஸ் அணி 11-10 என்ற நிலைக்கு ஆட்டத்தை கொண்டு வந்து ஆச்சரியம் கொடுத்தது.
ஆனால் யு-மும்பா அணியின் அஜித் சவானின் ஆட்டத்தை தமிழ் தலைவாஸ் வீரர்களால் கட்டுப்படுத்த முடியவில்லை. அவரின் வேகத்தை சாதகமாக பயன்படுத்தி கொண்டு தமிழ் தலைவாஸ் அணியின் டிஃபென்ஸ் எளிதாக சுற்று நூறாக உடைத்தார். இதனால் முதல் பாதி ஆட்டம் முடிவில் 2வது முறையாக தமிழ் தலைவாஸ் ஆல் அவுட் செய்யப்பட்டது. இதனால் ஆட்டத்தில் 22-14 என்ற கணக்கில் யு-மும்பா முன்னிலை பெற்றது.
இதன்பின் 2வது பாதி ஆட்டத்தில் யு-மும்பா அணி வீரர்கள் மிக எளிதாக நேரத்தை ஒரு பக்கம் கடத்தியதோடு, தமிழ் தலைவாஸ் அணி வீரர்களின் தவறுக்காக காத்திருந்தனர். அதேபோல் தமிழ் தலைவாஸ் அணியின் மொயின் ஷஃபாகி மட்டுமே ரெய்டில் புள்ளிகளை பெற்று கொடுத்தார். அவருக்கு உறுதுணையாக எந்த ரெய்டரும் புள்ளிகளை பெறாததும் பின்னடைவாக மாறியது.
இறுதியாக யு-மும்பா அணி 47-31 என்ற புள்ளிகள் கணக்கில் தமிழ் தலைவாஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றியை பெற்றது. இந்த சீசனில் 16 புள்ளிகள் வித்தியாசத்தில் யு-மும்பா அணி முதல்முறையாக வென்று அசத்தி இருக்கிறது. இந்த சீசனில் 10வது தோல்வியை சந்தித்துள்ள நிலையில், தமிழ் தலைவாஸ் அணியின் பிளே ஆஃப் கனவு கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துள்ளதாகவே பார்க்கப்படுகிறது.
ஏனென்றால் தமிழ் தலைவாஸ் அணிக்கு எஞ்சியுள்ள 5 போட்டிகளிலும் வெல்வதோடு, மற்ற அணிகளின் வெற்றி தோல்விகளை கொண்டே பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியும் என்ற சூழல் உருவாகியுள்ளது. ஐபிஎல் ஸ்டைலில் சொல்ல வேண்டுமென்றால், தமிழ் தலைவாஸ் அணி பிளே ஆஃப் செல்வதற்கு கால்குலேட்டரின் தேவை ஏற்பட்டுள்ளது.