ராஞ்சி: புரோ கபடி லீக் சீசன் 5ல் இன்று இரவு நடக்கும் ஆட்டத்தில் பாட்னா பைரேட்ஸ் அணியை சந்திக்கிறது தமிழ் தலைவாஸ் அணி.
இதுவரை விளையாடியுள்ள, 10 போட்டிகளில், 2ல் மட்டுமே வென்றுள்ளது சச்சின் டெண்டுல்கரின் தமிழ் தலைவாஸ் அணி. 6 போட்டிகளில் தோல்வி, 2ல் டிராவுடன், 21 புள்ளிகளைப் பெற்று, பி பிரிவில் புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் தமிழ் தலைவாஸ் உள்ளது.

அதே நேரத்தில் பாட்னா பைரேட்ஸ் அணி, 15 போட்டிகளில், 8ல் வெற்றி, 3ல் தோல்வி, 4 டிராவுடன், 54 புள்ளிகளைப் பெற்று, பி பிரிவில் புள்ளிப் பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது.
நேற்று இரவு நடந்த ஆட்டத்தில், பெங்களூரு புல்ஸ் அணியை 36-32 என்ற கணக்கில் பாட்னா பைரேட்ஸ் வென்றது.
மீதமுள்ள, 12 ஆட்டங்களில், 10ல் வென்றால்தான் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற முடியும் என்ற நிலையில் உள்ள தமிழ் தலைவாஸ் அணி, மிகவும் வலுவான பாட்னா பைரேட்ஸ் அணியை சந்திக்கிறது.
சென்னைக்கும் டோணிக்கும் உள்ள நெருக்கத்தை, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியின்போது மைதானம் அதிர்ந்தபோது பார்த்திருப்பீர்கள். டோணியின் சொந்த ஊரான ராஞ்சியில் இன்று நடக்கும் போட்டியில், அவரைப் போலவே சிறந்த பினிஷராக தமிழ் தலைவாஸ் மாறுமா?