சென்னையில் இன்று தொடங்குகிறது புரோ கபடி லீக்…!! அடி தூள் பண்ண காத்திருக்கும் தமிழ் தலைவாஸ்..!!
சென்னை: புரோ கபடி லீக் தொடரின் சென்னை சுற்று ஆட்டம் நேரு உள் விளையாட்டு அரங்கில் இன்று தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ், பெங்களூரு புல்சை எதிர்கொள்கிறது.
12 அணிகள் பங்கேற்றுள்ள 7வது புரோ கபடி லீக் தொடர் ஜூலை 20ல் ஐதராபாத்தில் தொடங்கியது. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் புள்ளி பட்டியலில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் நேரடியாக அரையிறுதிக்கு தகுதி பெறும்.
3 முதல் 6 வரையிலான இடங்களை பெறும் அணிகள் வெளியேற்றுதல் சுற்றில் மோத வேண்டும். அதில் வெல்லும் 2 அணிகள் அரையிறுதிக்குள் நுழையும். மொத்தம் 12 இடங்களில் அரங்கேறும் இந்த போட்டியில் ஐதராபாத், மும்பை, பாட்னா ஆகிய இடங்களில் போட்டிகள் நடைபெற்று முடிந்தன.

சென்னையில் தொடக்கம்
அகமதாபாதிலும் நேற்றைய தினமே போட்டி முடிந்தது. புரோ கபடி லீக் தொடரின் சென்னை சுற்று ஆட்டம் நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் அஜய் தாகூர் தலைமையிலான தமிழ் தலைவாஸ் அணி, ரோகித் குமார் தலைமையிலான நடப்பு சாம்பியன் பெங்களூரு புல்சை எதிர்கொள்கிறது.

3ல் வெற்றி
தமிழ் தலைவாஸ், 6 ஆட்டத்தில் ஆடி 3 வெற்றிகளை பெற்றுள்ளது. 2 ஆட்டங்களில் தோல்வியை சந்தித்து இருக்கிறது. ஒரு ஆட்டம் சமநிலையில் முடிந்தது. பெங்களூரு புல்ஸ் 7 ஆட்டத்தில் விளையாடி 4ல் வெற்றி, 3ல் தோல்வியை சந்தித்துள்ளது.

டிக்கெட்டுகள்
சென்னையில் வரும் 23ம் தேதி வரை போட்டி நடைபெறுகிறது. போட்டிக்கான டிக்கெட் விலை ரூ.150, ரூ.300, ரூ.1,250, ரூ.2,000 ஆகும். இணையதளம் மூலம் டிக்கெட்டுகளை பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ரசிகர்கள் எதிர்பார்ப்பு
ஐதராபாத், மும்பை, பாட்னாவை தொடர்ந்து சென்னையில் புரோ கபடி லீக் தொடக்கத்தை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர். 12 அணிகள் கொண்ட இந்த தொடரில் தமிழ் தலைவாஸ் அணி 20 புள்ளிகளுடன் 7வது இடத்தில் இருக்கிறது. பெங்களூரு புல்ஸ் அணியோ, 22 புள்ளிகளை பெற்று 5வது இடத்தில் உள்ளது.


Click it and Unblock the Notifications