டெல்லி: இந்திய துப்பாக்கி சுடும் அணி, 2025 ஏப்ரல் மாதம் முதல் தேதி அர்ஜென்டினாவின் பியூனஸ் ஐரிஸில் தொடங்கவுள்ள ISSF உலகக் கோப்பை போட்டிக்காக புது டெல்லியிலிருந்து நீண்ட பயணத்தை மேற்கொண்டுள்ளது. வழக்கமாக போட்டிகள் நெருங்கும் சமயத்தில் வெளிநாடுகளுக்குப் புறப்படும் இந்திய அணி, இந்த முறை முன்னதாகவே தெற்கு அமெரிக்காவை அடைந்துள்ளது.
உலகெங்கிலும் இருந்து சிறந்த துப்பாக்கி சுடும் வீரர்கள் இந்த உலகக் கோப்பையில் பங்கேற்க உள்ளனர். ஷாட்கன், பிஸ்டல் மற்றும் ரைபிள் பிரிவுகளில் 15 போட்டிகள் நடைபெறவுள்ளன. இதில் 400-க்கும் மேற்பட்ட வீரர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்த உள்ளனர்.
இந்திய அணியைப் பொறுத்தவரை, அடுத்த ஒலிம்பிக் சுற்றில் நுழைவது மிகவும் முக்கியமானது. 2026-ல் ஜப்பானின் நகோயாவில் நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டுப் போட்டிகள் இதற்கான முதல் படியாகும். அங்கிருந்து இந்திய துப்பாக்கி சுடும் வீரர்கள் 2028 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டிகளுக்கு அதிகபட்ச தகுதியை பெற முயற்சி செய்வார்கள்.

இது நீண்ட காலம் ஆகும் நடைமுறை போல் தோன்றினாலும், இந்தியாவில் கடினமாகவும், திட்டமிட்டபடியும் தயாராகி வரும் ஒரு விளையாட்டு என்றால் அது துப்பாக்கி சுடுதல் தான். கடந்த பாரிஸ் 2024 ஒலிம்பிக் போட்டிகளில் மனு பாக்கர் இரண்டு பதக்கங்களை வென்றதும், ஸ்போர்ட்ஸ் பிஸ்டல் பிரிவில் நான்காவது இடத்தைப் பிடித்ததும் இந்திய துப்பாக்கி சுடுதலுக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது.
கடந்த ஒலிம்பிக் போட்டியில் தோல்வியடைந்த சில வீரர்களும் தற்போது உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் மீண்டும் இடம் பிடித்து உள்ளனர். இந்திய துப்பாக்கி சுடுதலில் மிகுந்த அர்ப்பணிப்புடன் இருந்து வரும் ஒரு நபர் அபினவ் பிந்த்ரா. இவர் 2008 பெய்ஜிங் ஒலிம்பிக் தங்கப் பதக்கம் வென்றவர் ஆவார்.
ஐந்து ஒலிம்பிக் போட்டிகளில் தீவிரமாக போட்டியிட்டுள்ள அபினவ் பிந்த்ரா, அர்ப்பணிப்பு, ஆர்வம் மற்றும் கடின உழைப்பின் அடையாளமாக இருந்து வருகிறார். இந்நிலையில், இந்திய துப்பாக்கி சுடுதல் தற்போது எப்படி உள்ளது என்பது குறித்து பிரபல விளையாட்டு செய்தி ஊடகமான மைகேல்-க்காக அபினவ் பிந்த்ரா மனம் திறந்து பேசியுள்ளார். குறிப்பாக, இந்திய துப்பாக்கி சுடுதலின் ராணியாக பார்க்கப்படும் மனு பாக்கர் குறித்து அவர் பகிர்ந்துள்ள கருத்துக்களை இங்கே நாம் காணலாம்.
கேள்வி: மனு பாக்கர் மீண்டும் பயிற்சி செய்ய வந்துள்ளார். அவர் பல ஒலிம்பிக் தொடர்களில் விளையாட முடியும் என்று நினைக்கிறீர்களா? நீங்கள் அதைச் செய்துள்ளீர்கள், அதற்கு மிகப்பெரிய தியாகமும் கடின உழைப்பும் தேவை. இது குறித்து உங்கள் எண்ணம் என்ன?
அபினவ் பிந்த்ரா: நான் இதை ஒரு தியாகமாக பார்க்கவில்லை; இது தேர்வுகளைப் பற்றியது. இது போன்ற எலைட் விளையாட்டுக்கு அசைக்க முடியாத அர்ப்பணிப்பு தேவை, மேலும் விளையாட்டு வீரர்கள் அதை விரும்புவதாலேயே தங்கள் திறமைக்கு தங்களை அர்ப்பணிக்கிறார்கள். விளையாட்டில் நீண்ட காலம் நிலைத்திருக்க உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும், உணர்ச்சி ரீதியாகவும் தொடர்ந்து தங்களை தாங்களே தகவமைத்துக் கொள்ள வேண்டியது அவசியம். சரியான ஆதரவு, திட்டமிடப்பட்ட பயிற்சி மற்றும் தொடர்ந்து முன்னேற வேண்டும் என்ற உந்துதல் இருந்தால், மனு பாக்கர் மட்டுமல்ல, வேறு எந்த அர்ப்பணிப்புள்ள வீரரும் பல ஒலிம்பிக் தொடர்கள் வரை சிறந்து விளங்க முடியும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
கேள்வி: புதிய இந்திய துப்பாக்கி சுடும் வீரர்கள் அதிக நிலைத்தன்மையை அடைய எப்படி பயிற்சி அளிக்கப்பட வேண்டும்?
அபினவ் பிந்த்ரா: நிலைத்தன்மை என்பது பல பரிமாணம் உடையது. தொடர்ச்சியான முயற்சியை செய்ய வேண்டிய ஒரு பயணம். இதற்கு மந்திர, தந்திரம் என எதுவும் இல்லை. முறையான பயிற்சி, உளவியல் ரீதியான தயார்படுத்துதல், சரியான ஓய்வு மற்றும் வலுவான ஆதரவு அமைப்பு ஆகியவற்றின் கலவை தேவை.
தொழில்நுட்ப திறன்களில் மட்டுமல்லாமல், மன உறுதி, உடல் தகுதி மற்றும் அதிக அழுத்தமுள்ள போட்டிகளில் பதற்றத்தை கையாளுதல் ஆகியவற்றிலும் கவனம் செலுத்துவது முக்கியம்.
கேள்வி: தகுதிப் போட்டிகள், தேசிய விளையாட்டுப் போட்டிகள் மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் அதிக புதிய வீரர்கள் சிறப்பாக மதிப்பெண் பெற்றதை நாம் பார்த்தோம். இந்தியாவுக்கு அபரிமிதமான திறமை உள்ளது என்று நினைக்கிறீர்களா?
அபினவ் பிந்த்ரா: நிச்சயமாக. உள்நாட்டு போட்டிகளில் பங்கேற்பாளர்களின் எண்ணிக்கையே இந்திய துப்பாக்கி சுடுதலில் உள்ள ஆழத்தை நமக்கு உணர்த்துகிறது. அதைவிட முக்கியமாக, வீரர்களின் செயல்திறன் தரமும் உயர்ந்து வருகிறது. இளம் வீரர்கள் தொடர்ந்து தங்களை மேம்படுத்திக் கொள்வதோடு, உலக அரங்கில் இந்தியா ஒரு சக்திவாய்ந்த துப்பாக்கி சுடுதல் அணியாக திகழ்கிறது என்பதை நிரூபித்து வருகின்றனர். இந்த விளையாட்டுக்கான சூழல் தொடர்ந்து வளர்ந்து கொண்டே இருக்கிறது.
கேள்வி: தேசிய பயிற்சியாளர்களை அதிக அளவில் நியமிக்க NRAI அறிவித்துள்ளது குறித்து உங்கள் கருத்து என்ன? இந்திய பயிற்சியாளர்களால் திறமையை வெளிப்படுத்த முடியுமா, வெளிநாட்டு பயிற்சியாளர்களைச் சார்ந்திருப்பது குறையுமா?
அபினவ் பிந்த்ரா: அந்த திசையில் படிப்படியான மாற்றம் இருக்க வேண்டும். இந்திய பயிற்சியாளர்களுக்கு இந்த விளையாட்டுச் சூழல் குறித்து ஆழமான புரிதல் உள்ளது. மேலும் அவர்களுக்கு சமீபத்திய அறிவு, முறைகள் மற்றும் சர்வதேச அனுபவம் வழங்கப்பட வேண்டும். பயிற்சியாளர் கல்விக்கு முதலீடு செய்வது, அவர்களை உயர்மட்ட பயிற்சித் திட்டங்களுக்கு அனுப்புவது மற்றும் அதிநவீன விளையாட்டு அறிவியல் வசதிகளை அவர்களுக்கு வழங்குவது மிகவும் முக்கியம். நமது முன்னேற்றத்தில் வெளிநாட்டு நிபுணத்துவம் முக்கிய பங்கு வகித்தாலும், உலகத் தரம் வாய்ந்த வீரர்களைத் தாங்களே உருவாக்கக்கூடிய ஒரு வலுவான உள்நாட்டு பயிற்சி கட்டமைப்பை உருவாக்குவதே இலக்காக இருக்க வேண்டும்.
கேள்வி: 2026-ல், இந்தியா அடுத்த ஆண்டு ஜப்பானில் நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் போட்டியிட உள்ளது. இந்திய துப்பாக்கி சுடும் வீரர்களுக்கு இது எவ்வளவு முக்கியமானது?
அபினவ் பிந்த்ரா: ஆசிய விளையாட்டுப் போட்டிகள் ஒரு முக்கியமான நிகழ்வு. மேலும், இது ஒலிம்பிக் தொடருக்கான ஒரு ஆரம்ப கட்டமாக அமைகிறது. ஆசிய கண்டத்தில் உள்ள சிறந்த வீரர்களுக்கு எதிராக தங்களை சோதித்துப் பார்க்கவும், மேம்படுத்த வேண்டிய பகுதிகளை அடையாளம் காணவும் இந்திய துப்பாக்கி சுடும் வீரர்களுக்கு இது ஒரு வாய்ப்பை வழங்குகிறது.
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவது அவர்களின் நம்பிக்கையை அதிகரிப்பது மட்டுமல்லாமல், ஒலிம்பிக் போட்டிகளுக்கு தேவையான உத்திகளை, திறமைகளை செம்மைப்படுத்தவும் உதவுகிறது. 2024 பாரிஸ் ஒலிம்பிக் தொடருக்கு பிறகு உள்ள பயணத்தில் இது ஒரு முக்கியமான படியாகும்.