சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ்.. குகேஷ் கடைசி இடம்.. பிரான்ஸ் வீரர் அலிரேசா பிரௌஸ்ஜா சாம்பியன்!
சென்னை: சென்னையில் நடைபெற்ற 4வது சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் தொடரில், பிரான்ஸ் நாட்டின் அலிரேசா பிரௌஸ்ஜா சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றுள்ளார். புதன்கிழமை நடைபெற்ற 7வது மற்றும் இறுதிச் சுற்றில் இந்திய வீரர் அர்ஜுன் எரிகைசியுடன் விளையாடிய ஆட்டத்தை டிரா செய்ததன் மூலம் அவர் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.
இந்தத் தொடர் முழுவதும் தோல்வியே சந்திக்காமல் ஆதிக்கம் செலுத்திய அலிரேசா பிரௌஸ்ஜா, 2 வெற்றிகள் மற்றும் 5 டிராக்கள் மூலம் 4.5 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்தார். இறுதிச் சுற்றுக்கு முன்பாகவே அலிரேசா அரை புள்ளி முன்னிலையில் இருந்ததால், சாம்பியன் பட்டம் வெல்ல அவருக்கு கடைசி ஆட்டத்தில் டிரா மட்டுமே தேவைப்பட்டது.

அர்ஜுனுக்கு எதிராக மிக நிதானமாக விளையாடிய அவர், 41வது நகர்த்தலில் ஆட்டத்தை டிராவில் முடித்து சாம்பியன் பட்டத்தை உறுதி செய்தார். இந்த பட்டத்தை வென்றதன் மூலம் அவருக்கு 25 லட்சம் ரூபாய் பரிசுத் தொகையாக வழங்கப்பட்டது.
உஸ்பெகிஸ்தானின் நோடிர்பெக் அப்துசட்டோரோவ்-வுக்கும் சாம்பியன் பட்டம் வெல்லும் வாய்ப்பு இருந்தது. அதற்கு அவர் கடைசி சுற்றில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இருந்தார். ஆனால், டிமிட்ரி ஆண்ட்ரெய்கினிடம் 37வது நகர்த்தலில் அதிர்ச்சி தோல்வியடைந்தார். இதனால் அவரது சாம்பியன் கனவு கலைந்தது.
இத்தொடரில் தோல்வியே சந்திக்காத மற்றொரு வீரரான டிமிட்ரி மற்றும் இந்தியாவின் அர்ஜுன் எரிகைசி ஆகியோர் தலா 4 புள்ளிகளுடன் ஒன்றாக இரண்டாம் இடத்தைப் பிடித்தனர். நோடிர்பெக், இந்தியாவின் நிஹால் சாரின் மற்றும் எம்.பிரணேஷ் ஆகியோர் தலா 3.5 புள்ளிகளுடன் 4வது இடத்தைப் பகிர்ந்து கொண்டனர்.
மறுபுறம், சொந்த மண்ணில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் களம் இறங்கிய உலக சாம்பியனான இந்தியாவின் குகேஷ்-க்கு இந்தத் தொடர் பெரும் ஏமாற்றமாகவே அமைந்தது. அவர் விளையாடிய 7 ஆட்டங்களில் 3ல் தோல்வியடைந்து, வெறும் 2 புள்ளிகளுடன் இந்தத் தொடரில் கடைசி இடத்தைப் பிடித்தார். தனது கடைசி ஆட்டத்தில் அமெரிக்காவின் ஹான்ஸ் நிமனுடன் அவர் டிரா செய்தார். ஆனாலும், இந்தத் தொடரின் மோசமான சரிவிலிருந்து அவரால் மீள முடியாமல் போனது செஸ் ரசிகர்களைக் கவலையடையச் செய்துள்ளது.


Click it and Unblock the Notifications
