அம்லா அபார இரட்டை சதம்- தெ. ஆப்பிரிக்கா 558க்கு டிக்ளேர்
நாக்பூர்: நாக்பூர் முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி தனது முதல் இன்னிங்ஸை 6 விக்கெட் இழப்புக்கு 558 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. அம்லா அபார இரட்டை சதம் போட்டார்.
நாக்பூரில் நடந்து வரும் இந்தியா, தென் ஆப்பிரிக்கா முதல் டெஸ்ட் போட்டி விறுவிறுப்படைந்துள்ளது. முதல் நாளான நேற்று தென் ஆப்பிரிக்கா ரன்குவிப்பில் குதித்தது.
தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் சொற்ப ரன்களில் வீழ்ந்தாலும் கல்லிஸ் மற்றும் அம்லா ரன் குவிப்பில் இறங்கினர். இருவரும் சிறப்பாக ஆடினர்.
நேற்றைய ஆட்ட நேர இறுதியில், தென் ஆப்பிரிக்கா 2 விக்கெட் இழப்புக்கு 291 ரன்கள் எடுத்திருந்தது.
இன்று காலை ஆட்டம் தொடங்கியதும் கல்லிஸ், அம்லாவின் ரன் குவிப்பும் தொடர்ந்தது. இருவரும் மிகச் சிறப்பாக ஆடி வலுவான நிலைக்கு தென் ஆப்பிரிக்காவை கொண்டு சென்றனர்.
கல்லிஸ் இரட்டை சதத்தை நெருங்கிய நிலையி்ல் ஹர்பஜன் சிங் பந்தில், 173 ரன்கள் எடுத்திருந்தபோது ஆட்டமிழந்தார்.
அதேசமயம், அம்லா தனது முதலாவது இரட்டை சதத்தைப் பூர்த்தி செய்தார். சிறப்பாக ஆடிய அம்லா 253 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். டெஸ்ட் போட்டிகளில் அம்லா போட்டுள்ள முதல் இரட்டை சதம் இது.
அவருடன் இணைந்து ஆடிய வில்லியர்ஸ் 53 ரன்களைக் குவித்தார். பெளச்சர் 39 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
6 விக்கெட் இழப்புக்கு 558 ரன்கள் எடுத்திருந்த நிலையில் இன்னிங்ஸை டிக்ளேர் செய்வதாக கேப்டன் ஸ்மித் அறிவித்தார்.
இந்தியத் தரப்பில் ஜாகிர் கான் 3 விக்கெட்களை வீழ்த்தினார். ஹர்பஜன் சிங் 2 விக்கெட்களையும், ஷேவாக் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
இதையடுத்து இந்திய அணி விளையாடத் தொடங்கியது. கம்பீரும், ஷேவாக்கும் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கியுள்ளனர்.


Click it and Unblock the Notifications