சென்னை: சீனாவில் நடைபெற்ற ஸ்பீட் ஸ்கேட்டிங் உலக சாம்பியன்ஷிப் போட்டியில், இந்தியாவிற்கு முதல் தங்கப் பதக்கத்தை வென்று கொடுத்து, தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர் ஆனந்தகுமார் வேல்குமார் ஒரு புதிய சரித்திரத்தை எழுதியுள்ளார். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியின் மூலம், ஸ்கேட்டிங் உலக சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற சாதனையை அவர் செய்துள்ளார்.
சீனாவின் பெய்டைஹே நகரில் நடைபெற்று வரும் இந்த உலக சாம்பியன்ஷிப் தொடரில், திங்கட்கிழமை இரவு நடந்த சீனியர் ஆண்களுக்கான 1,000 மீட்டர் ஸ்பிரின்ட் பந்தயத்தில், 22 வயதான ஆனந்தகுமார் 1 நிமிடம் 24.924 வினாடிகளில் இலக்கைக் கடந்து தங்கப் பதக்கத்தைத் தட்டிச் சென்றார்.

சில நாட்களுக்கு முன்புதான், இதே தொடரின் 500 மீட்டர் ஸ்பிரின்ட் பிரிவில் வெண்கலம் வென்று, ஸ்கேட்டிங் உலக சாம்பியன்ஷிப்பில் சீனியர் பிரிவில் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற சாதனையை அவர் படைத்திருந்தார். தற்போது, அதே தொடரில் தங்கம் வென்று அந்தச் சாதனையை மேலும் மெருகேற்றியுள்ளார்.
இந்தியாவின் பதக்க எண்ணிக்கை இத்துடன் நிற்கவில்லை. ஜூனியர் பிரிவு 1,000 மீட்டர் ஸ்பிரின்ட் பந்தயத்தில், இந்தியாவின் கிரிஷ் ஷர்மாவும் தங்கப் பதக்கம் வென்று, இந்திய ஸ்கேட்டிங்கின் எதிர்காலம் பிரகாசமாக உள்ளது என்பதை உலகுக்கு உணர்த்தியுள்ளார்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த 22 வயதான ஆனந்தகுமார், சென்னை கிண்டியில் உள்ள பொறியியல் கல்லூரியில் கணினி அறிவியல் படித்து வருகிறார். அவரது மூத்த சகோதரி சுபி சுவேதா வேல்குமாரும் ஒரு இந்திய ஸ்கேட்டிங் வீராங்கனை என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனந்தகுமாரின் இந்த வெற்றி, ஒரே இரவில் கிடைத்ததல்ல. பல வருட கடின உழைப்பின் பலனாக, அவர் படிப்படியாக பல சாதனைகளைப் படைத்துள்ளார்:
தற்போது, உலக சாம்பியன் பட்டத்தையும் வென்று, இந்திய ஸ்கேட்டிங் விளையாட்டை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளார்.
வரலாற்றுச் சாதனை படைத்த ஆனந்தகுமாருக்கு, பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். "ஸ்பீட் ஸ்கேட்டிங் உலக சாம்பியன்ஷிப் 2025-ல் சீனியர் ஆண்களுக்கான 1000 மீ ஸ்பிரின்ட் பிரிவில் தங்கம் வென்ற ஆனந்தகுமார் வேல்குமாரை நினைத்துப் பெருமைப்படுகிறேன். அவரது உறுதி, வேகம் மற்றும் விடாமுயற்சி அவரை இந்தியாவின் முதல் ஸ்கேட்டிங் உலக சாம்பியனாக மாற்றியுள்ளது. அவரது சாதனை எண்ணற்ற இளைஞர்களுக்கு உத்வேகம் அளிக்கும். அவருக்கு வாழ்த்துகள் மற்றும் எதிர்கால முயற்சிகளுக்கும் எனது நல்வாழ்த்துகள்," என்று பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.